4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.
அதன்படி இன்று நடைபெற்ற இந்தத் தொடரின் 6வது லீக் தொடர் ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நியூஸிலாந்து - நெதர்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி முதல் மூன்று ஓவர்களில் ஒரு ரன் கூட எடுக்காமல் இருந்தது. நான்காவது ஓவரிலேயே நியூஸிலாந்து அணி ரன்கள் எடுக்க ஆரம்பித்தது. பிறகு 50 ஓவர்களை முழுமையாக ஆடிய நியூஸிலாந்து அணி 7 விக்கெட்களை இழந்து 322 ரன்களை எடுத்தது.
நியூஸிலாந்து அணியில், கான்வே 32 ரன்களும், வில் யங் 70 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 51 ரன்களும், மிட்சல் 48 ரன்களும், டாம் லாதம் 53 ரன்களும், சாட்னர் 36 ரன்களும் எடுத்தனர்.
நெதர்லாந்து அணியில் ஆர்யன் தத், பால் வான் மீகெரென், ரோலோஃப் வான் டெர் மெர்வே ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து 323 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்கஸ் ஆடிய நெதர்லாந்து அணி 46.3 ஓவரில் 223 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. நியூஸிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக கடந்த 5ம் தேதி நியூஸிலாந்து அணி இங்கிலாந்து அணியுடன் விளையாடியது. அந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், தான் விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூஸிலாந்து அணி புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.