Skip to main content

ஐசிசியின் முக்கிய கமிட்டிக்கு தலைமையேற்ற கங்குலி!

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

ganguly

 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கீழ் இயங்கிவரும் ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து அனில் கும்ப்ளே பதவி வகித்துவந்தார். இந்தக் கிரிக்கெட் கமிட்டியின் தலைவருக்கான பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும். அதேபோல் ஒருவர் மூன்றுமுறை இந்தப் பதவியை வகிக்கலாம். இந்தச் சூழலில் அனில் கும்ப்ளே தொடர்ச்சியாக மூன்றுமுறை இந்தப் பதவியை வகித்துவந்தார்.

 

இந்தநிலையில், தற்போது அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கங்குலி இந்தக் கிரிக்கெட் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மூன்று வருடங்களுக்கு கங்குலி அப்பொறுப்பில் இருப்பார்.

 

கிரிக்கெட் விளையாட்டின் விதிகள், விளையாடும் சூழ்நிலைகள், நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்கள் தொடர்பான விஷயங்கள், பந்துவீச்சு புகாரில் சிக்கும் பந்து வீச்சாளர்களுக்கான செயல்முறையை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட விஷயங்களில் இந்தக் கிரிக்கெட் கமிட்டி ஆலோசித்து, அதுதொடர்பாக ஐசிசியின் தலைமை நிர்வாக குழுவிற்குப் பரிந்துரை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Next Story

நாங்கள் தான் சாம்பியன்; மீண்டும் நிரூபித்த ஆஸ்திரேலியா!

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

Australia Won match world cup in 2023

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பங்குபெறும் உலகக் கோப்பை இறுதி ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

 

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் நான்கு ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து ரோஹித் சர்மா மற்றும் கோலி இணை ஓரளவு அதிரடி காட்டியது. பவுண்டரிகள் சிக்ஸர்கள் என அதிரடி காட்டிய ரோஹித் வழக்கம்போல சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு 47 ரன்களுக்கு ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ஸ்ரேயாசும் நான்கு ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

 

பின்னர் கோலியுடன் இணைந்த ராகுல் அணியை சரிவிலிருந்து மீட்டார். அரை சதம் கடந்த கோலி எதிர்பாராத விதமாக 54 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஜடேஜா 9 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். பின்னர் ராகுலும் அரை சதம் கடந்து 66 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டெயிலெண்டர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேற பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரிய குமாரும் 18 ரன்களில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். 

 

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல் மற்றும் ஜாம்பா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் வார்னர் 7 ரன்னிலும், மார்ஸ் 15 ரன்னிலும், ஸ்மித் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 47/3 என்று தடுமாறும்போது இந்திய ரசிகர்களுக்கும் சிறிய நம்பிக்கை பிறந்தது.

 

ஆனால், அந்த நம்பிக்கையை தகர்த்தெறியும் வண்ணம் ஹெட் மற்றும் லபுஷேன் இருவரும் தொடக்கத்தில் நிதானமாக ஆடி பின்பு அதிரடி காட்ட தொடங்கினர். சிறப்பாக ஆடிய ஹெட், சதத்தை கடந்து 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருக்கு துணை நின்ற லபுஷேன் 58 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம், 6வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்திய அணி தரப்பில், பும்ரா 2 விக்கெட்டுகளையும், ஷமி மற்றும் ஷிராஜ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.  சிறப்பாக ஆடி சதமடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகன் விருது 765 ரன்கள் குவித்த விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.