Skip to main content

பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தம்; நடராஜன் இடம்பெறாதது ஏன்?

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

natarajan t

 

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்றழைக்கப்படும் பி.சி.சி.ஐ., அக்டோபர் 2020ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 2021ஆம் ஆண்டு வரையிலான கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை நேற்று (15.04.2021) வெளியிட்டது. அதன்படி, ஒப்பந்த பட்டியலில் 'A+' பிரிவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் நீடிக்கின்றனர்.

 

'A' பிரிவில் அஸ்வின், ஜடேஜா, புஜாரா, ரஹானே, ஷிகர் தவான், ராகுல், ஷமி, இஷாந்த் சர்மா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகிய 10 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 'B' பிரிவில் சஹா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர், ஷர்துல் தாக்கூர், மயங்க் அகர்வால் ஆகிய 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 'C' பிரிவில் குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சஹார், கில், ஹனுமா விஹாரி, அக்சர் படேல், ஸ்ரேயஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், சஹால், சிராஜ் ஆகிய 10 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

 

A+' பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ரூபாய் 7 கோடியும், 'A' பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ரூபாய் 5 கோடியும், 'B' பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ரூபாய் 3 கோடியும், 'C' பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ரூபாய் 1 கோடியும் ஆண்டு வருமானமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தப் பட்டியலில் அண்மையில் இந்தியாவிற்கு அறிமுகமான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் இடம்பெறவில்லை. நடராஜனுக்கு இடம் கிடைக்காதது சமூகவலைதளங்களில் பேசுபொருளானது. இதுதொடர்பாக பல்வேறு கருத்துக்களும் எழுந்தன.

 

ஆனால், இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைப்படி, ஒரு வீரர் வருடாந்திர ஒப்பந்தம் பெற, மூன்று டெஸ்டுகளோ, 7 ஒருநாள் போட்டிகளோ, 10 இருபது ஒவர் போட்டிகளோ ஆடியிருக்க வேண்டும். ஆனால் நடராஜன் 2 ஒருநாள் போட்டிகளிலும், ஒரு டெஸ்ட் போட்டியிலும், 4 இருபது ஓவர் போட்டிகளிலும் மட்டுமே ஆடியுள்ளார். எனவே வருடாந்திர ஒப்பந்தம் பெறுவதற்கான அளவுகோலை அவர் எட்டவில்லை. இதனால் அவர் ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை.

 

அதேபோல் இஷான் கிஷன் 2 இருபது ஓவர் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். சூர்யகுமார் யாதவ், மூன்று இருபது ஓவர் போட்டிகளில் மட்டுமே ஆடியுளார். எனவே இவர்களுக்கும் வருடாந்திர ஒப்பந்தம் வழங்கப்படவில்லை.

 

 

Next Story

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணி அறிவிப்பு!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Test series against England; Indian team announcement

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதில் முதல் 2 போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி ரோஹித் ஷர்மா தலைமையிலான டெஸ்ட் அணியில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.