Skip to main content

அடிச்சா சிக்ஸ்... மிஸ் ஹிட்டும் சிக்ஸ்... வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ரகசியம் என்ன?

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 19 ரன்கள் தேவை. 8-வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய பிராத்வெய்ட் முதல் 4 பந்துகளில் 4 சிக்ஸர்கள் அடித்து தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியளித்தார். இப்படி பல முறை உள்ளூர் டி20 போட்டிகளில் கலக்கியுள்ளனர். இதுதான் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்ஸ்மேன்களின் பேட்டிங் ஸ்டைல். மற்ற எந்த அணியிடமும் இல்லாத அளவிற்கு பவர் ஹிட்டர்களை இந்த அணியிடம் மட்டுமே காண முடியும்.
 

russell

 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பவர் ஹிட்டர்கள் சிங்கில்ஸ் எடுக்க மிகவும் தடுமாறுவார்கள். அவர்களால் எளிதாக ஸ்ட்ரைக்கை ரோட்டேட் செய்ய முடிவதில்லை. ஆனால் லென்த் பால், யார்க்கர் லென்த், ஸ்லொவ் பால், பவுன்சர் என எப்படிப்பட்ட பந்துகளையும் எளிதாக எல்லைக் கோட்டிற்கு அப்பால் அனுப்புவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.
 

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெயில், பொல்லார்ட், ரஸ்ஸல் போன்ற முன்னணி வீரர்கள் ஹிட்டர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வந்துள்ள இளம் வீரர்களான ஹிட்மையர், நிக்கோலஸ் பூரன் ஆகியோரும் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் எளிதாக விளாசுகின்றனர். இன்னும் பல அதிரடி பேட்ஸ்மேன்கள் உருவாகிக்கொண்டே உள்ளனர்.
 

உடல்ரீதியாக பலமாகவும், உயரமாகவும் இருப்பதே இதற்கு காரணம் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் பவர் ஹிட்டர்களாக இருப்பதற்கு இது மட்டுமே காரணமல்ல. டைமிங், பேட்டை பிடிக்கும் விதம், பயிற்சி செய்யும் முறை, டெக்னிக், நம்பிக்கை என பல காரணிகள் இதற்கு பங்களிக்கின்றன.
 

மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை ஆகியவை, கண்ட்ரோல் மற்றும் திசையை தீர்மானிக்கின்றன. அப்பர் பாடி மற்றும் ஆர்ம்ஸ்களை மட்டுமல்லாமல் லோயர் பாடியின் லெக்கை மிகவும் பலப்படுத்துவது அவசியம். கால் பகுதிகள் மற்றும் வயிற்று தசைகள் தான் பேட்ஸ்மேன்களுக்கு தேவையான பவரை தருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
 

ஒரு கோல்ஃப் வீரர் கோல்ஃப் பந்தை அடிப்பதற்கு முன்னரே உடலியல், கன்ட்ரோல் மற்றும் டெக்னிக் உள்ளிட்ட அனைத்தையும் தயார் செய்துகொள்வது போலவே வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் பேட்டிங்கை அணுகுகின்றனர். மிஸ் ஹிட்டாகும் ஷாட்கள்கூட சிக்ஸர்களாக மாறுவதும் இதனால் தான்.
 

gayle

 

 

சாப்பிடுகின்ற உணவு முறை பலம் தருகிறது என்று பெரும்பாலானோர் கூறி வருகின்றனர். ஆனால் நாங்கள் பவர் ஹிட்டிங் ஷாட்களை விளையாடுவதற்கு நம்பிக்கை ஒரு பெரிய பங்கை தருகிறது. மிகவும் கடுமையாக பயிற்சி செய்கின்றோம். வலிமையை அதிகரிக்க கூடுதல் பயிற்சி தேவைப்படுகிறது. ஒரு உறுதியான தளத்தை தர வலுவான கால்கள் உதவுகின்றன. துல்லியமான டெக்னிக்கும் அவசியம் என பவர் ஹிட்டிங் பேட்ஸ்மேன் ஆண்ட்ரே பிளெட்சர் 2016-ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார்.
 

பல வருடங்களாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் திணறி வருகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஆனால் இதே காலகட்டங்களில் 2 முறை டி20 உலகக்கோப்பையை வென்று அசத்தியுள்ளது. அதற்கு அணியின் ஒப்பனிங் பேட்ஸ்மேன்கள் முதல் கடைசி பேட்ஸ்மேன் வரை பவர் ஹிட்டர்களாக இருப்பது முக்கிய காரணம்.
 

கால்களுக்கு அதிக பலத்தை தருவது, டெக்னிக், பயிற்சி செய்யும் விதம், பேட்டை பிடிக்கும் ஸ்டைல், பயன்படுத்தும் பேட், பேட் ஸ்விங், உடலியல் ரீதியான பலம், உணவு பழக்கவழக்கங்கள் ஆகியவை வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை மற்ற அணி வீரர்களிடம் இருந்து வேறுபடுத்துகிறது. இந்த காரணிகளே அவர்களுக்கு பவர் ஹிட்டிங் ஷாட்களுக்கு உதவுகிறது.
 

உலகம் முழுவதும் பல அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் கெயில், பொல்லார்ட், ரஸ்ஸல், நரைன், சமி உள்ளிட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தனிச்சிறப்பு வாய்ந்த பவர் ஹிட்டர்களாக இருந்து வருகின்றனர். பல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்ளூர் டி20 போட்டிகளில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தான். வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் பவர் ஹிட்டிங், கிரிக்கெட் விளையாடும் விதம், சிறு சிறு குறும்புத்தனம் போன்றவற்றை பார்க்க உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் விரும்புகிறார்கள்.