Skip to main content

ஐ.பி.எல். மூலம் மீண்டும் வருவேன் – சின்ன தல ரெய்னா

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

இவர் இல்லாமல் ஐ.பி.எல். தொடர் பற்றிய விவாதங்கள் இருக்காது. ஐ.பி.எல். போட்டி எங்கு நடந்தாலும் இவரின் ஆட்டம் எப்போதும் தனி ஸ்பெஷல். எதிர் அணியிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம். அனைவராலும் ரசிக்கப்படும் ஒரு நல்ல மனிதாபிமான கிரிக்கெட்டர். ஐ.பி.எல். தொடரின் மிஸ்டர் .ஐ.பி.எல். என்று புகழப்படுபவர் சுரேஷ் ரெய்னா. ஒரு காலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக இருந்த ரெய்னா, இன்று இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். வரும் ஐ.பி.எல்.  தொடரில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் உலகக்கோப்பை அணியில் இடம்பெற முடியும் என்று நம்புகிறார் சின்ன தல ரெய்னா.
 

raina

 

ஒருநாள் போட்டிகளில் 2015-ஆம் ஆண்டில் 20 போட்டிகளில் ஆடியிருந்த ரெய்னா 2016 மற்றும் 2017-களில் ஒரு போட்டியில்கூட அணியில் இடம்பெறவில்லை. 2018-ல் 3 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடிய ரெய்னா ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிறகு அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார்.

 
டி20 போட்டிகளை பொறுத்தவரை 2016-ல் 16 போட்டிகள், 2017-ல் 3 போட்டிகள், 2018-ல் 13 போட்டிகள் என தொடர்ந்து அணியில் இருந்து வந்தார் ரெய்னா. 2018-ல் தென் ஆப்ரிக்கா தொடர், நிதாஸ் ட்ராபி, அயர்லாந்து தொடர், இங்கிலாந்து தொடர் ஆகிய தொடர்களில் ஆடியுள்ளார் ரெய்னா. 2018-ல் ஸ்ட்ரைக் ரேட் 144, பேட்டிங் சராசரி 27 என ஓரளவு சிறப்பாக இருந்தாலும் இன்று அணியில் இடமில்லை. சமீபத்தில் அவருக்கு இந்திய அணியில் கிடைத்த வாய்ப்பில் நன்றாக விளையாடியுள்ளார். உலகக்கோப்பை நடைபெறும் இங்கிலாந்தில் 7 மாதங்களுக்கு முன்பு இந்திய அணிக்காக விளையாடிய ரெய்னா தற்போது உலகக்கோப்பை தொடரில்  இந்திய அணியில் இடம்பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.    
 

 

raina

 

“கிடைத்த வாய்ப்புகளில் நன்றாக விளையாடிய போதிலும் அணியில் இடம் பெறாமல்போனது வருத்தமளிக்கிறது. இது யாருடைய தவறுமில்லை. நான் கடினமாக உழைப்பேன், தொடர்ந்து ஃபார்மில் இருக்க முயற்சி செய்வேன்” என்று ரெய்னா கூறியுள்ளார்.  
 

ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் போட்டிகளில் அவ்வப்போது சிறப்பாக விளையாடி வந்தாலும் தொடர்ந்து ஃபார்ம் இல்லாமல் இருந்து வருகிறார். கார்த்திக், ராயுடு, கேதர் ஜாதவ், பண்ட் போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு தற்போது மிடில் ஆர்டர் வரிசையில் விளையாடி வருகின்றனர். நல்ல அனுபவம், பார்ட் டைம் பவுலர், மாஸ் பீல்டர் என இந்திய அணிக்கு தேவையான பல தகுதிகளை ரெய்னா பெற்றிருந்தாலும் அணியில் இடம்பிடிக்க முடியமால் உள்ளார்.
 

தோனி தலைமையில் 2011 உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய தொடர்களில் வென்றபோது இந்திய அணிக்கு முக்கிய வீரராக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. 2015-ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பிறகு ரெய்னா இந்திய அணியில் நிரந்தரமாக விளையாட முடியவில்லை. 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்கு மிடில் ஆர்டர் பேட்டிங்கில் ரெய்னா சிறப்பாக விளையாடிவந்தார். ஐ.பி.எல்.-லில் அனைத்து தொடர்களிலும் சென்னை அணிக்கு சிறந்த வீரராக வலம் வந்தவர் ரெய்னா. 
 

உலகக்கோப்பை தொடர் குறித்து ரெய்னா பேசும்போது இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் தோனி இறங்கலாம் என்று கூறினார். தோனி சிறந்த பினிஷராகவும், சூழ்நிலைக்கு ஏற்றார்போல ஆடும் திறமையும் கொண்டுள்ளதால் நான்காவது இடத்திற்கு தோனி மிகவும் பொருத்தமானவர் என்று ரெய்னா கூறினார். 
 

raina

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப்பிள்ளையும், சின்ன தலயுமான ரெய்னா சென்னை அணிக்கு பேட்டிங், பீல்டிங், பவுலிங் என ஆல்-ரவுண்டராக கலக்கி வருகிறார். உலகின் சிறந்த ஜாம்பவான் ஃபீல்டரான ஜாண்டி ரோட்ஸ் 2000-ஆம் நுற்றாண்டின் சிறந்த பீல்டராக 5 பேரை கூறிருந்தார். அதில் ரெய்னாவை  முக்கிய வீரராக கூறினார். வரும் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் உலகக்கோப்பை அணியில் இடம்பெற முடியும் என்ற நம்பிக்கையில் இருந்துவருகிறார் ரெய்னா.