Skip to main content

இது நிச்சயம் வலி தரக்கூடியது தான்- சேவாக் உருக்கம்...

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

கடந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி நான்காவது இடத்திற்கான வீரர் இன்றி அவதிப்பட்ட போது, இந்திய அணியில் 4-வது இடத்துக்கு சரியான வீரர் அம்பதி ராயுடுதான் என்று ரசிகர்கள் முதல் கோலி வரை அனைவரும் தெரிவித்தனர்.

 

sehwag about ambati rayudu retirement

 

 

ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஃபார்ம், சர்ச்சை ட்வீட் என பல காரணங்களால் இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படாமலேயே போனார். அதன் பின் அடுத்தடுத்து இந்திய வீரர்கள் காயமடைந்த நிலையில் கூட இளம் வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர். ஆனாலும் ராயுடுவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று திடீரென சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரின் ஓய்வு குறித்து பல இந்திய ரசிகர்களும், வீரர்களும், முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இதுகுறித்து கூறியுள்ள முன்னாள் இந்திய அணி வீரர் சேவாக், "உலகக்கோப்பைக்கு ராயுடுவை தேர்வு செய்யாமல் புறக்கணித்தது நிச்சயமாக வலியை தரக்கூடிய ஒரு விஷயம். இதன் பின் கண்டிப்பாக அவரது வாழ்க்கையில் சிறப்பானவைகள் கிடைக்கும்" என தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

8 நாளில் முடிவுக்கு வந்த அரசியல்; ஆந்திராவை அதிரச் செய்த அம்பத்தி ராயுடு

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
Ambati Rayudu has announced his resignation from YSR Congress Party

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பல சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அதோடு, ஐ.பி.எல் போட்டிகளில் கேப்டன் தோனியின் தலைமையில் சென்னை அணிக்காக அம்பத்தி ராயுடு விளையாடி வந்தார். கடந்த ஐ.பி.எல் சீசனில் சென்னை அணி குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், அந்த சீசனுடன் ஐ.பி.எல் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதற்கு முன்னதாக தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும், மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாகக் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடு கடந்த 28 ஆம் தேதி ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து தன்னை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார்.

இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியிலிருந்து விலகவும், அரசியலிலிருந்து சிறிது காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கவே இது” என்று குறிப்பிட்டுள்ளார். கட்சியில் சேர்ந்த 9 நாள் முழுதாக முடியாத நிலையில் அம்பத்தி ராயுடு கட்சியிலிருந்து விலகி இருப்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஆந்திர அரசியலில் கால் பதித்த அம்பத்தி ராயுடு!

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
Ambati Rayudu who set foot in Andhra politics

நடந்து முடிந்த 16 ஆவது ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதையடுத்து ஐபிஎல் டிராபி சென்னை கொண்டு வரப்பட்டு தி.நகரில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து டிராபிக்கு பூஜை போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என். சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான ரூபா குருநாத் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தனர். அதன் பின்னர் சென்னை அணியின் வீரர் அம்பத்தி ராயுடு மற்றும் ரூபா குருநாத் ஆகியோர் ஐபிஎல் டிராபியுடன் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார்.

இதற்கு முன்னதாக தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாகக் கூறியிருந்தார். அதே சமயம் நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அம்பத்தி ராயுடு, ஆந்திர அரசியலில் களமிறங்கவுள்ளதாகவும், அவர் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான அம்பத்தி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியை அம்பத்தி ராயுடு சந்தித்து வாழ்த்து பெற்றார்.