மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் 28 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து வந்த விராட் கோலி நிதானமாக ஆடினார். அரை சதம் கடந்த கோலி 80 ரன்கள் எடுத்த நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் மொத்தமாக 674 ரன்களை குவித்தார். இதன் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 11 போட்டிகளில் குவித்த 673 ரன்கள் எனும் சாதனையை முறியடித்தார். ஒரு நாள் உலகப்கோப்பை தொடரில் ஏறத்தாழ 20 ஆண்டுகால சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய கோலி சதத்தை கடந்தார். இதன் மூலம் சச்சினின் மற்றொரு சாதனையான ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் (49) விளாசிய வீரர் எனும் சாதனையையும் முறியடித்து 50 ஆவது சதத்தை கடந்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்களை குவித்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 398 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில் விராட் கோலி சாதனைக்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விராட் கோலியின் ரோல் மாடலும், அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரான, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான சச்சின், விராட் கோலியைப் பாராட்டியுள்ளார். தனது சமூக வலைத்தளப் பக்கமான எக்ஸ் தளத்தில் "இந்திய டிரஸ்ஸிங் ரூமில் நான் உங்களை முதன்முதலில் சந்தித்தபோது, மற்ற அணியினர் என் கால்களைத் தொடும்படி கேலி செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும், திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள். அந்த சிறுவன் ‘விராட்’ சிறந்த வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட என்க்கு பெரிய மகிழ்ச்சி எதுவும் கிடையாது. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும், மிகப் பெரிய அரங்கில் அதைச் செய்ததும், மேலும் எனது சொந்த மைதானத்தில் இது நடந்தது எனக்கு பெருமகிழ்ச்சியைத் தந்துள்ளது”என பதிவிட்டுள்ளார்.