கோவை மாவட்டம் அவினாசி மேம்பாலம் அருகே சுமார் 20 மெட்ரிக் டன் எடை கொண்ட எரிவாயு ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் டேங்கர் பகுதி சேதம் அடைந்ததால் உள்ளே இருந்த எரிவாயு கசிந்து வருகிறது. இது அந்த பகுதி மக்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது.
கோவை உப்பிலிபாளையம் அவிநாசி மேம்பாலம் என்ற பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுவரை எவ்வளவு எரிவாயு வெளியாகி உள்ளது என்பது தொடர்பாக தொடர்ந்து பொறியாளர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். டேங்கரின் ஒரே பகுதியில் லீக் இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தெரிய வந்திருக்கிறது.
எரிவாயு கசிவைக் கட்டுப்படுத்திய பிறகு தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு மேலே எந்த ஒரு மின் கம்பிகளும் இல்லாமல் இருப்பதை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேம்பாலம் என்பதால் அந்த பகுதியில் மின் கம்பிகள் இல்லை. தொடர்ந்து லாரியிலிருந்து கசிந்து வரும் எரிவாயு மீது தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள மக்கள் சிறிது அச்சத்தில் உறைந்துள்ளனர்.
அதிகாலை 3 மணி அளவில் இந்த விபத்து நடந்த நிலையில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக எரிவாயு கசிவை தடுக்கும் பணியும் டேங்கரை அப்புறப்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்து நடந்த அந்த பகுதியைச் சுற்றியுள்ள ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவிக்கையில், ''டேங்கர் லாரியில் 18 டன் எரிவாயு இருக்கிறது. டேங்கரை அப்புறப்படுத்த திருச்சியில் இருந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்படுகிறது. இந்த விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மக்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்'' என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''மாற்று வாகனத்தின் மூலம் எரிவாயுவை மாற்றி எடுத்துக் கொள்வதற்கான ஏற்பாடு தான் செய்ய வேண்டும். அதற்கான வாகனம் திருச்சி, சேலத்தில் தான் இருக்கிறது. எனவே அங்கு இருந்து அந்த வாகனங்கள் வந்துகொண்டிருக்கிறது. வாயுக் கசிவை அடைத்து விட்டார்கள். கண்டெய்னரையும் லாரியுடன் இணைக்கும் கப்ளிங் பிளேட் சேதமடைந்துள்ளது. அதனை ரீப்ளேஸ் பண்ண வேண்டும். அந்த பிளேட்டும் வந்து கொண்டிருக்கிறது. அதை சரி செய்து விட்டால் உடனடியாக கிரேன் மூலம் டேங்க்கரை அப்புறப்படுத்திவிடலாம்'' என்றார்.