பெரும் சர்ச்சைகளுக்கு பிறகு ஐசிசி தனது முக்கியமான விதி ஒன்றில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில், நியூஸிலாந்து -இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் சம அளவில் ரன்களைக் குவித்தன. இதனையடுத்து சூப்பர் ஓவர் விளையாடப்பட்டது. இதிலும் இரு அணிகளும் சமமான ரன்கள் எடுத்தன. ஆனால் ஐசிசி யின் விதிப்படி அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஐசிசி யின் இந்த விதி சர்ச்சைக்குள்ளானது.
இதனையடுத்து ரசிகர்களிடமிருந்து கடும் நெருக்கடிகளை சந்தித்த ஐசிசி தற்போது இந்த விதியை மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய விதியின்படி ஐசிசி தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் சமநிலையில் முடிந்தால், சூப்பர் ஓவர் வழங்கப்படும். இதுவும் சமநிலையில் முடிந்தால் மற்றொரு சூப்பர் ஓவர் வழங்கப்படும். இப்படி ஆட்டத்தின் முடிவு தெரியும் வரை சூப்பர் ஓவர் தொடரும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.