பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் ஸ்மித் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், அதில் ஆஸ்திரேலிய அணி, அபார வெற்றி பெற்றது. அதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.
இரண்டாவது நாள் ஆட்டமான இன்று ஸ்டீவ் ஸ்மித் 23 ரன்கள் எடுத்த போது டெஸ்ட் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில் 7000 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். கடந்த 1946 ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் வால்டர் ஹம்மண்ட் 131 இன்னிங்ஸில் 7000 ரன்கள் எடுத்ததே இதுவரை அதிவேக 7000 ரன்கள் என்ற சாதனையாக இருந்தது. தற்போது 73 ஆண்டுகள் கழித்து, 126 இன்னிங்ஸில் 7000 ரன்களை குவித்து ஸ்மித் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.