Skip to main content

"என்னுடைய தேர்வும், கோலியின் தேர்வும் பல நேரங்களில் ஒன்றாக இல்லை" - ஆர்.சி.பி முன்னாள் பயிற்சியாளர் ஆதங்கம்!!! 

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

rcb coach

 

பல நேரங்களில் என்னுடைய தேர்வும், விராட் கோலி தேர்வும் வேறுவேறாக இருந்ததே பெங்களூர் அணியின் தோல்விக்குக் காரணம் என அவ்வணியின் முன்னாள் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

 

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் அணியை வழிநடத்துகிறார். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வரும் கோலி, அவரது அணியை ஐபிஎல் தொடரில் சரியாக வழிநடத்த முடியாமல் தவித்து வருகிறார். தனிப்பட்ட முறையில் அதிக ரன்கள் குவிப்பது போன்ற சாதனைகள் படைத்தாலும், அணியை வெற்றி பெறச் செய்து கோப்பையை வெல்வது அவர் தலைமையிலான பெங்களூர் அணிக்கு பெரும் சவாலான விஷயமாக உள்ளது. டிவில்லியர்ஸ், விராட் கோலி போன்ற அதிரடி நட்சத்திரத்திரங்கள் கொண்ட அணியாக இருந்தும் அவ்வணியால் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாதது பெங்களூர் அணி ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் பெங்களூர் அணியின் முன்னாள் பயிற்சியாளரான 'ரே ஜென்னிங்ஸ்' இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர், "ஐபிஎல் தொடரில் ஒரு அணியில் மொத்தம் 25-க்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். அனைத்து வீரர்களையும் கவனிக்க வேண்டியது என் பொறுப்பு என்று நினைத்தேன். விராட் கோலி இது தொடர்பான விஷயங்களில் தனித்து நின்றார். சில நேரங்களில் அவர் தவறான வீரர்களைத் தேர்வு செய்வார். இந்த நேரத்தில், இவர் பந்து வீசினால் சரியாக இருக்கும் என்று நான் நினைப்பேன். ஆனால் விராட் கோலி இது தொடர்பாக வேறு ஒரு திட்டம் வைத்திருப்பார். ஐபிஎல் என்பது சர்வதேச போட்டிகளில் இருந்து முற்றிலும் வேறானது. ஆறு வார காலத்தில் சில வீரர்கள் சரியான ஃபார்மில் இருப்பார்கள், சிலர் இருக்க மாட்டார்கள். இத்தகைய சூழலில் குறிப்பிட்ட சில வீரர்கள் நிறைய போட்டிகளில் விளையாட வேண்டும். என் முடிவு இவ்வாறு இருந்தால், அவருக்கு இதில் வேறு விதமான பார்வை இருக்கும். இவையெல்லாம் நடந்து முடிந்தவை. தற்போது அவரது தலைமைப்பண்பு நாளுக்கு நாள் மேம்பட்டு வருவதைப் பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. அடுத்தடுத்து வரும் தொடர்களில் அவர் தலைமையிலான அணி கோப்பையை வெல்லும்" என்றார்.

 

ரே ஜென்னிங்ஸ் பயிற்சியின் கீழ் விளையாடிய போது பெங்களூர் அணி இருமுறை இறுதிப்போட்டியில் நுழைந்ததும், அதில் தோற்று கோப்பையைத் தவறவிட்டதும் குறிப்பிடத்தக்கது.