FIDE உலக செஸ் போட்டி அரையிறுதியில், உலக செஸ் தரவரிசையின் 3வது வீரரை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் ஆர்.பிரக்ஞானந்தா.
பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) என்ற செஸ் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் ஜூலை 24, 1924இல் தொடங்கப்பட்டு தற்போது வரை இயங்கி வருகிறது. இந்த 10வது சதுரங்க உலகக் கோப்பை 2023, கடந்த ஜூலை 30 வெகு விமரிசையாகத் தொடங்கி அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்று வந்தது. மொத்தம் 206 வீரர்கள் பங்குபெற, ஒற்றை-எலிமினேஷன் விளையாட்டு முறையில் நடைபெற்றது.
இதில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது கிராண்ட்மாஸ்டர் (ஜிஎம்), ஆர். பிரக்ஞானந்தா, ஆகஸ்ட் 21 அன்று அரையிறுதி டை-பிரேக் ஆட்டத்தில், உலக தரவரிசையில் 3வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் ஜிஎம் ஃபேபியானோ கருவானாவை (2,782) தோற்கடித்து. FIDE 2023 செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார். இதற்கு முன் பல சர்வதேசப் போட்டிகளிலும் சாதனை படைத்துள்ளார் இவர்.
இறுதியாக பிரக்ஞானந்தா (3.5) ஃபேபியானோ கருவானா (2.5) புள்ளிகள் எனக் களம் இளம் வீரருக்குச் சாதகமாக இருந்தது. முதல் இரண்டு டை பிரேக் ஆட்டங்களை டிரா செய்த பிரக்ஞானந்தா, மூன்றாவது கேமில் கருவானாவை வீழ்த்தி அடுத்த ஆட்டத்தை டிராவில் முடித்தார். இதன் மூலம் கருவானாவை வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். ஏற்கனவே பிரக்ஞானந்தா, உலக நம்பர் 2 வீரர் ஃபேபியானோ மற்றும் 3வது இடத்தில் இருக்கும் ஹிகாருவை வென்றுள்ள நிலையில், உலக நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தாவால் வெல்ல முடியுமா என்பது தான் சதுரங்க வட்டாரத்தில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்த அரையிறுதி வெற்றியின் மூலம், பிரக்ஞானந்தா கேண்டிடேட்ஸ் என்ற அடுத்தகட்ட போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார். இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர் நடப்பு உலக சாம்பியனான சீன (ஜிஎம்) லிரன் டிங்குடன் விளையாடுவார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு அல்லது FIDEவின் விதிகளின்படி, உலகக் கோப்பையில் முதல் மூன்று இடங்களில் உள்ள வீரர்கள் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில் சென்னையின் இளம் வீரர் பிரக்ஞானந்தா, நார்வே கிராண்ட்ஸ்லாம் வீரரும் உலக செஸ் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் மாக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்ளவுள்ளார். இதற்கு முன் மூன்று முறை பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தியுள்ளார். முதன்முறை 2016இல் தோற்கடித்த பொழுது 10 வயது வீரராக இருந்தார். இதனைத் தொடர்ந்து, 2018ல் நடைபெற்ற விரைவான செஸ் போட்டியில் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார். கடந்த, 2022லும், பிரக்ஞானந்தா மூன்றாவது முறையாக கார்ல்சனை தோற்கடித்துள்ளார்.
1 ஜூலை 2011 முதல் FIDE உலக செஸ் தரவரிசையில் கார்ல்சன் நம்பர் 1 இடத்தைப் பிடித்து தற்போது வரை தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். இந்த நிலையில், இன்றைய போட்டியில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என ரசிகர்கள் இடையே எதிர்பார்க்கப்படுகிறது.
பிரக்ஞானந்தாவிற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும் ட்விட்டரில், “மனமார்ந்த வாழ்த்துக்கள் உலக செஸ் போட்டியில் உங்களின் அபாரமான செயல்திறனுக்காக” எனப் பதிவிட்டிருந்தார். இவரைத் தொடர்ந்து, இளைஞர்கள் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, “தமிழ்நாட்டின் இளம் செஸ் ஸ்டாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் FIDE World Cup 2023 இறுதிப் போட்டியை எட்டியதற்காக. உங்கள் அபார சாதனையால் ஒட்டுமொத்த தமிழகமும் பெருமிதம் கொள்கிறது. இறுதிப் போட்டியில் மைல்கல் வெற்றியைப் பதிவு செய்ய உங்களை வாழ்த்துகிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.
இவர்களைத் தொடர்ந்து ராகுல் காந்தியும் ட்விட்டரில், “FIDE செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் பயணத்திற்கு பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள். மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிரான இறுதி டைட்டில் போட்டிக்கு எனது வாழ்த்துகள். ஒரு பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் உங்களுக்காக வாழ்த்துகிறார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். பிரதமர் மோடி தற்போது வரை வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.