வீரர்களின் பலம் களத்தில்தான் தெரியும். யோ-யோ தேர்வுமுறை மட்டுமே ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் எல்லை கிடையாது என கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் இடம்பெறுவதற்கான ஒரே தேர்வான யோ-யோ டெஸ்ட் மூலம், ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்காக சிறப்பாக செயல்பட்ட அம்பத்தி ராயுடு நீக்கப்பட்டதால் சர்ச்சைக்குள்ளானது. இதனால், யோ-யோ டெஸ்ட் முறை குறித்து முன்னாள், இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணிக்காக முதல்முறையாக உலகக்கோப்பை வென்றுதந்த கபில்தேவ் அதுகுறித்து விமர்சித்துள்ளார்.
ஒருவீரர் போட்டியில் விளையாடும் அளவுக்கு ஃபிட்டாக இருக்கிறார் என்றால், அவரை விளையாட விடவேண்டும். வேறெந்த டெஸ்ட்டையும் நாம் முன்வைக்க வேண்டியதில்லை. கால்பந்து ஜாம்பவான் மாரடோனா மெதுவாகத்தான் ஓடுவார். ஆனால், அவரிடம் பந்து வந்துவிட்டால் மிகச்சிறப்பாக செயல்படுவார். எனவே, உடல்தகுதி என்பது ஒவ்வொரு வீரருக்கும் மாறுபடும் என கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
மேலும், 15 நிமிடம் கூட களத்தில் ஓடமுடியாத சுனில் கவாஸ்கர், மூன்று நாட்களுக்கு களத்தில் நிற்பார். அதேபோல், இந்திய கிரிக்கெட் அணியில் நீடித்த நட்சத்திரங்கள் பலருக்கும் இந்த டெஸ்ட் முறை இருந்திருந்தால் சாதனைக்கு பதில் சோதனையே மிஞ்சியிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.