Skip to main content

ஒருநாள் போட்டியில் மிஸ் பண்ணதை டி20 போட்டியில் பிடித்த தோனி!

Published on 19/02/2018 | Edited on 19/02/2018

ஒருநாள் போட்டியில் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சாதனையை, டி20 போட்டியில் படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி. 

 

தென் ஆப்பிரிக்கா உடனான முதல் டி20 போட்டி ஜோனஸ்பெர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் வைத்து நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடுமையான இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 9 விக்கெடுகள் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. 

 

Dhoni

 

இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரீஜா ஹெண்ட்ரிக்ஸ் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், புவனேஷ்வர் குமார் வீசிய பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். ஆட்டத்தையே மாற்றியமைத்தது இந்த விக்கெட். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக கேட்சுகளைப் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையை தோனி படைத்தார். தோனி 275 போட்டிகளில் 134 கேட்சுகளைப் பிடித்துள்ளார். முன்னதாக இலங்கை அணியின் குமார் சங்ககாரா 254 போட்டிகளில் 133 கேட்சுகள் பிடித்திருந்ததே உலக சாதனையாக இருந்தது.

 

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக கேட்சுகளைப் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் தோனி. தென் ஆப்பிரிக்க அணியுடன் நடைபெற்ற கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 கேட்சுகளைப் பிடித்திருந்தால், 300 கேட்சுகளைப் பிடித்த நான்காவது விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்திருப்பார். ஆனால், அன்றைய போட்டியில் தோனி ஒரேயொரு கேட்ச் மட்டுமே பிடித்திருந்தார்.