Skip to main content

தோனி விஷயத்தில் நடந்தது மிகப்பெரிய தவறு- விளாசும் சச்சின், கங்குலி...

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 

indian palyers sachin, lakshman and ganguly statement about dhoni in worldcup semifinal match

 

 

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. 240 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாத நிலையில் ஜடேஜாவும், தோனியும் சிறப்பாக ஆடி அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றனர். இருப்பினும் கடைசி ஓவர் வரை போராடி இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இக்கட்டான நிலையில் இந்தியா இருந்த போது, தோனியை முன்னரே களமிறக்காதது ஏன் என இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின், லக்ஷ்மன், கங்குலி ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து பேசிய சச்சின், "இக்கட்டான சூழலில் தோனியை முன்கூட்டியே களமிறக்கியிருக்க வேண்டும். ஹர்திக் பாண்ட்யாவிற்கு முன்பாக தோனி வந்திருக்க வேண்டும். அதேபோல தினேஷ் கார்த்திக் 5ஆவது இடத்தில் இறங்கியது என்னை பொருத்தவரை சரியான முடிவு இல்லை” எனத் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய வி.வி.எஸ். லக்ஷ்மன், "ஹர்திக் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருக்கும் முன்பே தோனி களமிறங்கியிருக்க வேண்டும். 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியில் தோனி நான்கவதாக களமிறங்கி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். அதேபோல நேற்றும் அவர் முன்பே களமிறங்கியிருக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இது குறித்து பேசியுள்ள கங்குலி, "தினேஷ் கார்த்திக்கிற்கு முன்பாக தோனி இறங்கியிருந்தால், அவர் ரிஷப் பந்த்திற்கு சரியான ஆலோசனை கூறி நிதானமாக ஆட வைத்திருப்பார். மேலும் வேகப்பந்து வீச்சாளர்களின் ஓவர்களில் பவுண்டரிகள் அடிக்கவும் வலியுறுத்தியிருப்பார். இதன் மூலம் தோனி விக்கெட் சரிவையும் தடுத்திருப்பார். அத்துடன் தோனி தனது அனுபவத்தை பயன்படுத்தி நிலைமையை அறிந்து விளையாடி இருப்பார். எனவே தோனியை ஏழாவது இடத்தில் களமிறக்கியது மிகப் பெரிய தவறு” எனத் தெரிவித்துள்ளார்.