2021ஆம் ஆண்டிற்கான 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஆலோசகராக முன்னாள் இந்திய கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உலகக்கோப்பை தொடரில் வரும் 24ஆம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.
இந்தநிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தன்வீர் அகமது, தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டது தொடர்பாக இந்திய அணியை சீண்டியுள்ளார். அணி அழுத்தத்தில் இருப்பதாலேயே தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, “காகிதத்தில் பார்க்கும்போதும், அவர்கள் உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாடிய விதத்தை வைத்து பார்க்கும்போதும் இந்தியா சிறந்த அணி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நீங்கள் சமீபத்திய செயற்பாடுகளைப் பார்க்க வேண்டும். முதலில், நான் விராட் கோலியை பற்றி பேச விரும்புகிறேன். அவர் மிகுந்த அழுத்தத்தில் இருந்தார். தனது டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். ‘எனது ஆட்டம் சிறப்பாக இல்லாததால் நான் டி20களில் கேப்டனாக இருக்கமாட்டேன்’ என அவர் தெரிவித்தார்.
அவர்கள் (இந்திய அணி) அழுத்தத்தில் இருக்கலாம். அதனால்தான் அவர்கள் தோனியை ஆலோசகராக ஆக்கியுள்ளார்கள். நீங்கள் ஐபிஎல் தொடரைப் பார்த்தாலும், இந்திய அணியில் உள்ள வீரர்கள் முதல் 10 சிறந்த செயற்பாடு பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை. எனவே நிச்சயமாக அழுத்தம் இருக்கும்.”
இவ்வாறு தன்வீர் அகமது கூறியுள்ளார்.