Skip to main content

ராயுடுவிற்கு நேர்ந்தது அநீதி -ஹர்பஜன் சிங் அதிரடி பேச்சு! 

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

Ambati Rayudu

 

 

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை அணியில் ராயுடுவிற்கு இடம் அளிக்காதது, அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி என இந்திய அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

 

13-வது ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டியாக நடைபெற்ற போட்டியில், சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி வீரர் அம்பதி ராயுடு அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். தொடக்கத்தில் சில முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சென்னை அணிக்கு, ராயுடு மற்றும் டு பிளஸிஸ் பார்ட்னர்ஷிப் பெரிதும் கைக்கொடுத்தது. ராயுடுவின் இந்த அதிரடியான ஆட்டத்திற்குப் பிறகு, தற்போது அவருக்குப் பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

 

இந்திய அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், "ராயுடு மற்றும் டு பிளஸிஸ் இணைந்தது அணியின் வெற்றிக்கு திருப்புமுனையாக அமைந்தது. நல்ல தொடக்கம் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து இதேபோல நாம் முன்னேற வேண்டும். ராயுடுவை எவ்வளவு பாராட்டினாலும் அது மிகாது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை அணியில் ராயுடுவிற்கு இடம் கிடைத்திருக்க வேண்டும். அவரை அணியில் சேர்க்காததை, அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே கருதுகிறேன். அவர் தன்னுடைய திறமை என்னவென்று இன்று நிரூபித்திருக்கிறார். வயது ஒருபுறமிருந்தாலும், அணித்தேர்வின் போது திறமையையும் கருத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.