சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், தோனி பின்வரிசையில் களமிறங்கியது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
13-வது ஐபிஎல் தொடரின் நான்காவது நாளான நேற்று, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சென்னை அணியின் கேப்டனான தோனி ஏழாவது இடத்தில் களமிறங்கி, இறுதி ஓவரில் அதிரடியாக ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். மோசமான பந்துவீச்சு மற்றும் தோனி முன்கூட்டியே களத்தில் இறங்காதது ஆகியவை, சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனுமான கவுதம் காம்பீர், இது குறித்து தோனியை கடுமையாக சாடியுள்ளார்.
அதில் அவர், "கெய்க்வாட் மற்றும் சாம் கரணை முன்வரிசையில் அனுப்பிவிட்டு, தோனி ஏழாவது இடத்தில் களமிறங்குவது அர்த்தமற்றது. அவர் தான் அணியை முன்னின்று வழிநடத்த வேண்டும். 217 ரன்கள் சேஸிங் செய்யும்போது, அவர் ஏழாவது இடத்தில் இறங்குவதற்கு பெயர் அணியை முன் நின்று வழிநடத்துவதல்ல. டு பிளஸிஸ் தனி ஆளாக நின்று போராடினார். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் தோனி மூன்று சிக்ஸர் அடித்ததில் அணிக்கு எந்த பயனும் இல்லை. ரெய்னா இல்லாதபோது, கெய்க்வாட், டு பிளஸிஸ், முரளி விஜய், கேதர் ஜாதவ் என மற்றவர்கள் உங்களை விட சிறந்தவர்கள் என மக்களை நினைக்க வைக்கிறீர்கள்" எனக் கூறினார்.