Skip to main content

இங்கிலாந்து இப்படி செய்திருக்க வேண்டும்; சுழற்பந்தை எதிர்கொள்ள சச்சின் கூறிய டிப்ஸ்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

nn

 

உலகக் கோப்பையின் 13வது லீக் ஆட்டம் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸை வென்ற இங்கிலாந்தின் கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் குர்பாஸ் 80 ரன்களும், அலிகில் (58) ரன்களும் முஜீப்பின் 28 ரன்களும் கை கொடுக்க, 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது.

 

பின்னர் 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.

 

இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பந்து வீச தேர்ந்தெடுத்ததே அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அருண் ஜெட்லி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது. ஆப்கானிஸ்தான் அணிக்கு வலுவான இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதைக் கணக்கில் கொள்ளாமல், முதலில் பந்துவீச தேர்ந்தெடுத்தது இங்கிலாந்தின் தவறான முடிவாகிவிட்டது. இங்கிலாந்து வீரர்கள் சுழற்பந்து வீச்சுக்குத் தடுமாறுவார்கள் என்று தெரிந்தும், முதலில் பந்து வீசத் தீர்மானித்தது தவறான முடிவாகிவிட்டது என்றும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இங்கிலாந்து எப்படி சுழற் பந்துவீச்சை எதிர்கொண்டிருக்க வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர், சச்சின் டெண்டுல்கர் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். தனது சமூக வலைத்தள பக்கமான எக்ஸ்-ல் அவர் பதிவிட்டுள்ளதாவது, "தரமான சுழற்பந்து வீச்சாளர்களை நீங்கள் எதிர்கொள்ளும் போது, அவர்களின் கைகளைப் பார்த்து பந்தை கணிக்க வேண்டும். ஆனால், இங்கிலாந்து வீரர்களோ அதற்கு மாற்றாக பந்து பிச்சாகி சுழலும் இடத்தை வைத்து கணித்தது தான் அவர்கள் செய்த தவறு" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

குடியாத்தம் கிரிக்கெட் பிரீமியர் லீக்; ‘ஐபிஎல்’க்கு டஃப் கொடுக்கும் ‘ஜிசிபிஎல்’

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Just like the IPL, the GCPL is an auction for players

உலக புகழ் பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் அணிகள்  போல் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், குடியாத்தம் கிரிக்கெட் பிரீமியர் லீக் ( ஜி சி பி எல் ) எனப் பெயரிட்டு கிரிக்கெட் அணிகள் தொடங்கப்பட்டு, 14 அணிகள் ஏலம் எடுக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதி போட்டியில் பல்வேறு துறை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Just like the IPL, the GCPL is an auction for players

இதனிடையே சீசன் 2 போட்டிகளுக்காண அணிகள் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி குடியாத்தம் அருகே உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. ஐபிஎல் போட்டிக்கு அணிகள் ஏலம் எடுப்பதைப் போன்று 16 அணிகள் உருவாக்கப்பட்டது. இந்த அணிகளுக்கு வீரர்கள் ஏலம் விடுகின்றனர். இதற்காக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 350 விளையாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளனர். கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்ய ஒரு அணிக்கு முப்பதாயிரம் பாயிண்ட்டுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் வீரர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

Just like the IPL, the GCPL is an auction for players

இது குறித்து ஜிசிபிஎல் ஒருங்கிணைப்பாளர் சதிஷ் கூறும் போது,  மாநிலத்தின் கடைக்கோடி நகரமான குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்து திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களை வெளி உலகத்திற்கு எடுத்துச் செல்லவே இந்த ஜிசிபிஎல் அமைப்பு உருவாக்கப்பட்டது. முதல் சீசனில் நடைபெற்ற விளையாட்டுகளில் பங்கேற்ற சித்து என்ற மாணவன் தற்போது மாநில அளவிலான அண்டர் 19 லீக் போட்டிக்கு தேர்வு ஆகி உள்ளதாகவும் எந்த விதமான வியாபார நோக்கமும் இல்லாமல் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளி கொள்வதற்காகவே இந்தப் போட்டி நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார். ஏலம் முடித்து விரைவில் போட்டிகள் தொடங்க உள்ளது.

Next Story

கலைந்த கனவு - பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

Published on 08/05/2024 | Edited on 08/05/2024
 boy who played cricket passed away tragically after being hit by a ball

மகாராஷ்டிர மாநிலம், புனே அடுத்துள்ளது லோஹிகன். இப்பகுதியைச் சேர்ந்தவர் 'ஷம்பு காளிதாஸ் காண்ட்வே' என்ற ஷவுரியா. 11 வயதான இவர், ராமன்பாக் நகரில் உள்ள நியூ இங்கிலீஷ் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது, அவருக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சிறுவன் விடுமுறையைக் கழித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த மே 2 ஆம் தேதி சிறுவன் ஷவுரியா லோஹேகான் பகுதியில் தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றார். விடுமுறை என்பதால் கூட்டாக கிரிக்கெட் விளையாடச் சென்றவர்கள், டர்ஃப் விக்கெட் ஒன்றை தேர்ந்தெடுத்து குழுவாக சேர்ந்து கிரிக்கெட் விளையாடினர். அப்போது, சிறுவன் ஷவுரியா எதிர்முனையில் நின்ற பேட்டருக்குப் பந்து வீசினார். அந்தப் பந்தை எதிர்கொண்ட பேட்டர் அதை நேராக ஓங்கி அடித்துள்ளார். பந்தானது, பேட்டர் அடித்த வேகத்தில் கண்இமைக்கும் நொடியில் சிறுவன் ஷவுரியாவின் பிறப்புறுப்பைப் பலமாகத் தாக்கியது. இதனால், சிறுவன் வலியால் துடித்துள்ளார். உடனே, பந்தை அடித்த பேட்டர் ரன் எடுக்க பவுலிங் எண்டுக்கு ஓடிய நேரத்தில் வலியால் துடித்த ஷவுரியா, நிலைதடுமாறி மைதானத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார்.

இதையடுத்து, ஷவுரியா சுருண்டு விழுந்ததைப் பார்த்து பதறிப்போன சக நண்பர்கள் ஷவுரியாவை எழுப்ப முயற்சித்தனர். ஆனால், அவரை எழுப்ப முடியவில்லை. இதனால், செய்வதறியாமல் திகைத்தவர்கள் உடனே அருகில் இந்தப் பெரியவர்களிடம் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து ஷவுரியாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஷவுரியா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அவரது குடும்பத்தினர்களும் நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து லோஹிகன் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் விளையாடிய சிறுவன் திடீரென பந்து தாக்கி உயரிழந்தாக கூறப்படும் நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், சிறுவன் ஷவுரியா பந்து வீசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அப்போது, திடீரென பேட்டர் அடித்த பந்து ஷவுரியாவின் பிறப்புறுப்பைப் பலமாக தாக்குகிறது.

அடுத்த சில நிமிடங்களிலேயே சிறுவன் சுருண்டு விழுகிறார். பின்னர், அவரை நண்பர்கள் எழுப்ப முயற்சிக்கின்றனர். முடியாததால் அருகில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவிக்க, அவர்கள் வந்து சிறுவன் ஷவுரியாவை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், நடந்த சம்பவம் விபத்து எனத் தெரியவந்து இருப்பதாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, விசாரணை  நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, சிறுவன் ஷவுரியா உயிரிழப்பு குறித்து அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவிக்கையில், " ஷவுரியா 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். ஆனால், அவருக்கு  விளையாட்டு மீதே அதிக ஆர்வம் இருந்தது. அவர் கனவே மல்யுத்த வீரராக வேண்டும் என்பதுதான். அதற்கான பயிற்சியும் எடுத்து வந்தார். இப்படியான சூழலில் சிறுவன் ஷவுரியா மரணம் எங்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவரின் இழப்பு மிகுந்த மனவருத்தத்தை தருகிறது..'' எனக் கூறினர்.

புனே அருகே விளையாடச்சென்ற இடத்தில் 11 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் பகுதியில் பந்து தாக்கி சுருண்டு விழுந்து உயரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.