கரோனா காரணமாக ஒத்திவைப்பட்ட ஐ.பி.எல் தொடரானது ஐக்கிய அரபு அமீரத்தில் வரும் 19 -ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தாண்டு ஐ.பி.எல் நடைபெறுமா என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்த நிலையில் ஒரு வழியாக பி.சி.சி.ஐ பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தி ஐ.பி.எல் தொடரை அறிவித்தது. அனைத்து அணி வீரர்களும், ரசிகர்களும் இத்தொடருக்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கையில் சென்னை அணிக்கு மட்டும் சிக்கல்கள் அடுத்தடுத்து வந்தன.
முதலில் ஒரு பந்து வீச்சாளர் மற்றும் உதவியார் உட்பட 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னை அணி வீரர்களால் திட்டமிட்டபடி வலைப்பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. அதனையடுத்து நட்சத்திர வீரரான ரெய்னா சொந்த காரணங்களுக்காக இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் மூத்த பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இத்தொடரில் பங்கெடுப்பாரா என்பதும் இன்னும் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது. கரோனா தொற்று உள்ள 13 பேரை தவிர்த்து மற்ற வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் அனைத்து வீரர்களும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தற்போது கரோனா தொற்று இல்லாத வீரர்கள் தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்துள்ளனர்.
சென்னை அணி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தோனியும், வாட்சனும் அருகருகே அமர்ந்து காலை உணவு சாப்பிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின் சென்னை அணியில் இயல்புநிலை திரும்பியது, சென்னை அணி ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.