Skip to main content

"உடலை நாம் கவனிக்காவிட்டால்... சீனு ராமசாமி சொன்ன ஒற்றை வார்த்தை.." - நடிகர் ராஜேஷ் சிறப்பு பேட்டி

Published on 14/10/2022 | Edited on 14/10/2022

 

 

Actor Rajesh special interview on the need to protect body parts!

 

 

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு நடிகர் ராஜேஷ் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "இயக்குநர் சீனு ராமசாமி, ஒரு அருமையான கருத்தை சொன்னார். ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, உடல் உறுப்புகள்  நம்மை பொறுப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் வரை, நமக்கு கவலை இல்லை. உடல் உறுப்புகளை நாம் பொறுப்பாகக் கவனிக்க வேண்டிய காலம் வந்தால், நம் ஆரோக்கியத்தில் இறங்கு முகம் என்று சொன்னார். நான் கூட இதைப் பற்றி யோசிக்கவில்லை. அவருக்கு நான் கூறினேன், சிறிய வயதிலிருந்தே உடலைப் பொறுப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தால், அது நம்மை 90 வயது வரை பொறுப்பாகப் பாதுகாத்திடும். 

 

நாம் உடலைக் கவனிக்கவில்லை என்றால், உடல் உறுப்புகள் நம்மைப் பொறுப்பாகக் கவனித்துக் கொள்ளாது. அது கவனித்துக் கொள்ளாமல் போனால், நாம் தினமும் ஒவ்வொரு நிமிடமும், நமது உடல் உறுப்புகளைக் கவனிக்க வேண்டிய நிலைமை வந்துவிடும். அப்பொழுது தான் நமது ஆரோக்கியம் இறங்கு முகம் என்று சொன்னேன். இது எதற்கு சொல்கிறேன் என்றால், எல்லாருக்கும் இது தேவையான ஒன்று. 

 

மூளையைப் பற்றிய விஷயங்கள் நமக்கு நிறைய தெரியனும். உடல் உறுப்புகளில் எங்கெங்கு குறைகள் இருக்கிறது என்பது நமது கண்ணாடியில் பார்த்தால் தெரிந்துவிடும். ஆனால், மூளைக்கு உள்ளே உள்ள குறைபாடுகளை நாம் தெரிந்துக் கொள்ள முடியாது. டேனியல் என்ற ஆராய்ச்சியாளர் 12,000 பேர்களை 30 ஆண்டுகள் ஸ்டெடி பண்ணிருக்கிறார். மூன்று தலை முறையினரின் மூளையையும் ஸ்டெடி செய்து, அவர்களுக்கு எப்படி எப்படி குழந்தைகள் பிறக்கிறது? அவர்களுக்கு எதிர்காலம் எப்படி இருக்கிறது? அவர்கள் வெற்றி பெறுகிறார்களா? தோல்வி பெறுகிறார்களா? என்று ஒரு கணக்கை எடுத்திருக்கிறார் டேனியல். அது தான் ஒரு ஆச்சரியமான விஷயங்கள். எவ்வளவு பெரிய ஆய்வு தெரியுமா? இது. 

 

புகழ்பெற்ற ஒரு ஹோட்டலில் தலைமை சமையலராகப் பணியாற்றியவர் ஹாலி. இவருக்கு கீழ் அதிகமான சமையலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அந்த பெண் மிகவும் நல்லவள். அந்த பெண்ணை ஆங்கிலத்தில் சென்சிடிவ் என்று அழைப்பார்கள். ரொம்ப உணர்ச்சி வசப்படுவார்கள். ஹாலி வந்ததில் இருந்து ஹோட்டலுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. இந்த பெண் சமைக்கும் அனைத்து வகை உணவுகளும், நன்றாக வியாபாரம் ஆகும். இந்த பெண்ணிடம் தொழில் கற்றுக் கொண்டு , வெளியே சென்று உணவகம் வைத்தவர்கள் ஏராளம். 

 

தனது தொழிலைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அந்த பெண். யார் வந்து எவ்வளவு கேட்டாலும் சமையல் செய்வது குறித்து விரிவாக விவரிப்பார். அந்த அளவுக்கு ஹாலி அருமையான பெண்மணி. மனிதநேயம் உள்ளவர். எல்லாருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். ஆனால், அவரிடம் உள்ள குறைகள் என்றால் ஒரு கமெண்டை கூட அவர் பொறுத்துக் கொள்ள மாட்டார். உணவு குறித்த 'Feedback' வந்தால், தனியாக உட்கார்ந்து அழுந்துக் கொண்டிருப்பார். யாராவது கூட வேலை செய்பவர்கள், வேலை செய்யவில்லை என்றாலோ, சமைக்கவில்லை என்றாலோ, தான் சொன்னபடி கேட்கவில்லை என்றாலோ நிறையக் கோபப்படுவார். ஆனால், யாரையும் குறை சொல்ல மாட்டார். 

 

அந்த பெண் மீது முதலாளியிடம், ஹோட்டலில் வேலை செய்பவர்கள், சமையல் சரியில்லை என்று சொன்னால் ஹாலி கோபப்படுகிறார் என்று அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஹோட்டல் முதலாளி ஹாலியை அழைத்து, அதிக முறை அறிவுரை கூறியுள்ளார். எனினும். அந்த பெண் கேட்கவில்லை; தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து அழுதுள்ளார். அத்துடன், ஹோட்டலுக்கு சரியாக வேலைக்கு வராமல் அடிக்கடி விடுமுறை எடுத்துள்ளார். 

 

இந்த நிலையில், மீண்டும் ஹாலியை அழைத்த ஹோட்டல் முதலாளி, உங்கள் மனம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டும். ஒன்று உங்களை நான் டெர்மினேட் செய்ய வேண்டும்; மூன்று மாத சம்பளத்தைக் கொடுத்து, இன்றே உங்களை நீக்க வேண்டும். இல்லையென்றால், டாக்டர் டேனியலிடம் நீங்கள் ட்ரீட் மென்ட் எடுக்க வேண்டும். மருத்துவமனையில் தங்கி ட்ரீட்மென்ட் எடுக்க தேவையில்லை. அங்கு   செல்லுங்கள் பெரிய ஆய்வு செய்வார். பின்னர், மருந்துக் கொடுப்பார். அதற்கான, செலவை நானே ஏற்றுக் கொள்கிறேன். உங்களது சம்பளத்தில் பிடித்தம் செய்ய மாட்டேன் என்றார். 

 

இதற்கு ஹாலி நான் மருத்துவமனை செல்கிறேன் எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, பெண்ணை பரிசோதித்த மருத்துவர் டேனியல், ரிப்போர்ட் ஒன்றை வழங்கியுள்ளார். அந்த பெண்ணின் மூளையில் நான்கு இடங்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறது. அதனால் அதற்குரிய மருந்தை சாப்பிட வேண்டும். பெண்ணின் மூளையில் மூன்று நான்கு முறை அடிப்பட்டுள்ளது. பின்னர், சிறுவயதில் இரண்டு துன்புறுத்தல்களைக் கொடுத்திருக்கலாம். அந்த பெண் 10 வயது இருக்கும் போது பாலியல் தொல்லை கொடுத்திருப்பார்கள். இல்லையென்றால் அடித்திருப்பார்கள். மன ரீதியாக மிரட்டல் விடுத்திருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதேபோல், ஹாலியிடம் கேட்ட போது, மூன்று நான்கு கார் விபத்துகளில் அவர் இருந்திருப்பது தெரிய வந்தது. அப்போது, ஹாலிக்கு காயம் எதுவும் ஏற்படாத நிலையில், மூளையைப் பாதித்துள்ளது என்று கூறி மருந்துகளைக் கொடுத்து அனுப்பிவிட்டார் மருத்துவர். மேலும், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மருத்துவமனைக்கு வர சொல்லி மருத்துவர் ட்ரீட்மென்ட் கொடுத்துள்ளார். இது குறித்து ஹோட்டல் முதலாளியிடமும் தெரிவித்துள்ளார். 

 

அந்த ட்ரீட்மெண்ட்க்கு பிறகு, அந்த பெண்மணி யார் எந்த குறைகள் சொன்னாலும், கவலைப்படவில்லை. சிரித்துக் கொண்டே இருக்கிறார். உடனே தனது குறைகளைச் சரி செய்கிறார். முன்பைவிட, சாப்பாட்டை ருசியாக சமைக்கிறார். முன்பை விட எல்லோருக்கும் சமையல் செய்வது குறித்து நன்றாக செய்து கொடுக்கிறார். எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கிறார். முதலாளியிடம் அடிக்கடி ரிப்போர்ட் கொடுக்கிறார். எனக்கு இன்னும் இரண்டு ஆட்கள் வேலைக்கு வேண்டும் என்று கேட்கிறார். ஹோட்டலை மென்மேலும் வளர்ப்பதில் ஆர்வம் காட்டினார். தான் வாங்கிய கடன் முழுவதையும் அடைத்துவிட்டார். மேலும், இரண்டு மூன்று தொழில்களை செய்து தனது வாழ்க்கையில் முன்னேறினார் ஹாலி." இவ்வாறு நடிகர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

 

மருத்துவர், ஆராய்ச்சியாளர் டேனியலின் 30 ஆண்டுகளாக ஆராய்ச்சியில், ஹாலி என்ற பெண்மணி ஒரு பகுதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.