Skip to main content

கர்ப்பிணி பெண்கள் இந்தக் கீரையை சாப்பிடலாமா??? -வழியெல்லாம் வாழ்வோம் #19

Published on 11/07/2018 | Edited on 16/07/2018

பெண்களின் அடுத்த பருவம் திருமணத்துக்கு ஆயத்தமாகி, தாய்மையை நோக்கி நகரும் பருவம். சில முரண் கருத்துக்கள் இருந்தாலும், ஒரு பெண் என்பவள் முழுமையடைவது தாய்மையை மட்டுமே என்று இந்த சமூகம் ஆணித்தரமாக நம்புகிறது. கரு உற்று ஓரிரு குழந்தைகளை மட்டும் பெற்றாலும் சிறப்பு. ஆனால் கருவுறாமல், கருணையுற்று ஆயிரமாயிரம் குழந்தைகளுக்கு தாயான மகளிரையும் வணங்கவேண்டும். மலடென்று அவர்களை நிந்திப்பது அபத்தம். ஆனால் அந்தக் குறைபாடு வராமலிருக்க என்ன செய்யலாம். தாய்மையடையும் காலத்திலும், பேறுகாலத்தில் ஒரு பெண்ணின் உடல்நலத்தை உணவுமுறைகள் சார்ந்து எப்படிப் பேணலாம் என்று காணலாம். இல்லறம் இனிதாகி, தாய்மையடையும் பெண் தன் உடல்நலத்தையும் பேணி, தன் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் பேணுதல் வேண்டும். அதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.

 

Spinach


 

தாய்மை:

கருவுற்ற பெண்ணை, கர்ப்பிணி என்று அழைப்பது சிலரது வழக்கமாக உள்ளது. கர்ப்பிணி என்பது வடமொழிச் சொல் என்று பல தமிழ் புலவர்கள் கூறுகின்றனர். கர்ப்பம் அடைதல் பிணி அல்லது நோய் என்று பொருள்படும் இந்த வார்த்தைப்பயன்பாட்டை விடுத்து நம் தமிழ் சொல்லை இனி பயன்படுத்துமாறு தமிழ்கூறும் நல்லுலகை நான் வேண்டிக்கொள்கிறேன். கருவுற்ற பெண்ணை, 'தாய்மை' அடைந்தாள்; மகப்பேறு உற்றாள் என்றே நம் முன்னோர்கள் கூறியிருந்தனர். அதே அப்பெண் போல் பிள்ளை பெறும் காலத்தை, அவளது வாழ்வில் மிகவும் புனிதமான காலமென்று;  பேறு பெற்ற காலமென்று கருதியதால் தான், அதை 'பேறுகாலம்' என்று இன்றளவும் அழைக்கின்றனர்.

 

பழந்தமிழ் நூல்களில் தாய்மை, பேறுகால நலன்: 

தாய்மை மற்றும் பேறுகால பிரச்சனைகளுக்கான தீர்வுகளுக்காய் இங்கே நான் குறிப்பிட விளைவது, நம் ஆதி தமிழ் மருத்துவ நூல்களான,  "அகத்தியர் வைத்திய வல்லாதி" மற்றும் "யூகி வைத்திய சிந்தாமணி" ஆகியவற்றில் குறிப்பிடப்பட்ட கருத்துகளைத்தான்.

 

 

 

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எனப்படும் மீயொலி சோதனைக்கருவி போன்ற அறிவியல் வசதி இல்லாத அந்தக் காலத்தில், 'செப்பியதினம் ஒன்றில் கடுகு போலாம்’ என சிசு கருப்பையில் எந்த அளவில் எந்த நாளில் இருக்கும் என்று துலையமாக இந்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல. வயிற்றிலிருக்கும் கருவுக்கு, எந்தெந்த உறுப்புகள் எந்தெந்த மாதத்தில் உருவாகும் என்பதையும் இந்நூல்கள் விளக்குகின்றன."பூவிலே இரண்டு திங்கள் கழுத்துண்டாம், புகழ் சிரசு முறுப்பாகும்" என்ற பாடல் விளக்குகிறது. ஐந்தாம் மாதம் காது, மூக்கு உதடும், ஏழாம் மாதம் தலைமுடியும் தெரியும் என இந்நூல்கள் சொல்கின்றன. இன்றைய நவீன அறிவியலும் இதையே வழிமொழிகிறது.
ஆனால் தமிழில் அறிவியல் இல்லை என்ற சொல்வதே நம் தமிழ்நாட்டில் நாகரீகமாய் கருதப்படுகிறது. அந்த எண்ணத்தை முற்றிலுமாய் அகற்றல் நம் அவசியத்தேவை.

 

 

 

தாய்மையின் போது உண்ணவேண்டிய உணவுகள்:

மசக்கை எனப்படும் கர்ப்பக்கால வாந்தி, அப்போது எந்த உணவையும் சாப்பிட முடியாத போது ஏற்படும் ரத்தசோகை, குடல் புண் ஆகியவை என்று முதல் மூன்று மாதங்கள் (முதல் டிரைமஸ்டர்) கருவுற்ற பெண்களை பாதிக்கும் காரணிகள். அதற்கு முக்கிய உணவு மாதுளை மட்டுமே. சிலருக்கு ஏற்படும் ரத்தச் சொட்டுகள் என அனைத்துக்கும் மாதுளை தீர்வு அளிக்கும்.

 

இதே போல் கர்ப்பகால உபாதைகளிலிருந்து மீள, தாமரைப்பூவும், தக்கோலமும், நெய்தல் கிழங்கும், செங்கழிநீர் கிழங்கும் பயன்படும் என்று அந்த நூல்கள் கூறுகின்றன. மேல் குறிப்பிடப்பட்ட உணவுகளில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. அவை வலி நிவாரணிகளாக உள்ளன என்று இன்றைய ஆய்வுகள் கூறுகின்றன.  மேலும் அவை தொற்றுக்களை நீக்க வல்லவையாகவும், ஆன்ட்டி ஆக்சிடண்ட் தன்மையுடையவையாகவும் உள்ளன என்றும் அறியப்படுகின்றன. மேலும் இவை இரும்பு மற்றும் கனிம சத்துகள் நிறைந்தவையாக இருப்பதால், வேறெந்த விட்டமின் மற்றும் பிற சத்து மாத்திரைகள் கருவுற்ற பெண்களுக்கு தேவைப்படுவதில்லை. 

 

மசக்கை காலத்தில் (Morning Sickness) கேழ்வரகு, கைக்குத்தல் அரிசியில் செய்த கூழ்களை பெண்களுக்கு வழங்குவர். அதனோடு முருங்கைக் கீரையும் பாசிப் பருப்பு கலந்த பொரியலும் கொடுப்பது வழக்கம். கேழ்வரகு அடை, அவியல் தரும் பயனை, விலை உயர்ந்த எந்த டானிக்குகளாலும் தர முடியாது.

 

 முன்பக்கம் சிறுநீர்ப்பையும் பின்பக்கம் மலக்குடலும் அழுத்தப்படுவதால் முறையே நீர்ச்சுருக்கமும் மலச்சிக்கலும் கர்ப்பக் காலத்தில் பெண்களை அதிகம் பாதிக்கும். அத்திப்பழம், வாழைத்தண்டு பச்சடி, கனிந்த வாழைப்பழம், இரவில் மிக்க குறைந்த அளவில் கடுக்காய் பிஞ்சு சாப்பிட்டால், இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

 

இதுவரை தாய்மை அடைந்த பெண்ணின் தேவைகள் பற்றி பேசினோம். இனி தாய்மையடைவதை தாமதிக்க செய்யும் காரணிகள் பற்றியும் அவற்றை எவ்வாறு இயற்கை வாழ்வியல் சார்ந்து மாறிக்கொள்ளலாம் என்பது பற்றியும் அடுத்த தொடரில் காண்போம். அதன் நீட்சியாய் பேறுகாலத்தில் போது செய்ய வேண்டியவற்றையும் காணலாம்.  

 

 

 

முந்தையபகுதி:

பெண்குழந்தைகள் சிறுவயதிலேயே பூப்பெய்த என்ன காரணம்... வழியெல்லாம் வாழ்வோம் #18