தோட்டத்திற்கு சென்ற பெண்ணை, மலைப்பாம்பு உயிருடன் விழுங்கிய சம்பவம் இந்தோனோஷியாவில் நடந்துள்ளது.
இந்தோனேஷியாவில் முன்னா தீவில் உள்ள சுலாவெசி நகரில் ''பெர்சியாபென் லாவெலா'' என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த வா திபா என்ற 51 வயது மதிக்கத்தக்க பெண் கடந்த வியாழக்கிழமை தனது தோட்டத்தில் காய்கறிகள் பறிப்பதற்காக சென்றார். ஆனால் காய்கறி பறிக்க சென்ற அவர் இரவாகியும் வீட்டிற்கு வரவில்லை.
இதையடுத்து அவரின் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும், வா திபாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவர் காய்கறி தோட்டத்திற்குத்தானே சென்றார் என்று இறுதியாக அருகிலுள்ள காய்கறி தோட்டத்தில் தேட ஆம்பித்தனர் அவரது உறவினர்கள். அப்போது தோட்டத்தில் ஒரு பெரிய மலைப்பாம்பு இரையை விழுங்கிவிட்டு நகரமுடியாமல் படுத்துக்கிடந்தது.
ஒருவேளை திபாவை இந்த மலைப்பாம்பு விழுங்கி இருக்கலாம் என சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்த ராட்சத மலைப்பாம்பைக் கொன்று, அதன் வயிற்றுப்பகுதியைக் கத்தியால் கிழித்துப்பார்த்தபோது உள்ளே வா திபா இறந்த நிலையில் இருந்தார்.
இது குறித்து உள்ளூர் போலீஸ் ஹெம்கா கூறுகையில், ஏறக்குறைய 23 அடி(7.5 மீட்டர்) நீளத்தில் பாம்பு தோட்டத்தில் படுத்து நகரமுடியாமல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். இதற்கு முன் சிறிய அளவிலான மலைப்பாம்புதான் இந்த பகுதியில் சுற்றித் திரியும், ஆனால், இதுபோன்ற ராட்சத மலைப்பாம்பை நாங்கள் பார்த்தது இல்லை. எனவே ஒருவேளை திபாவை இந்தப் பாம்பு விழுங்கி இருக்கலாம் என திபாவின் உறவினர்களும், கிராம மக்களும் சந்தேகித்தனர் எனவே அந்த பாம்பின் உடலை கிழித்தோம். அதில் அவருடைய உடல் சந்தேகித்தபடியே இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம்.
இந்த தோட்டப் பகுதியில் ஏற்கனவே பாம்புகள் திரியும். ஆனால் குறைந்தபட்சம் 15 அடி நீளமுள்ள பாம்புகள்தான் இங்கே அதிகம் ஆனால் 20 அடி நீளம் கொண்ட பாம்பு இப்படி மனிதனை விழுங்கும் அளவிற்கு இருக்கும் என்பது அதிர்ச்சியாய் இருக்கிறது என தெரிவித்தார்.