நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகப் பிரதமர் மோடி 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்ததற்கு ஐநா சபை பாராட்டுத் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தையே முடக்கிவைத்துள்ள நிலையில், அதன் தாக்குதலிலிருந்து இந்தியப் பொருளாதாரமும் தப்பிக்கவில்லை என்பதே நிதர்சனம். இம்மாதிரியான ஒரு இக்கட்டான சூழலில் மக்கள் முன் உரையாற்றிய பிரதமர் மோடி, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக இந்தியாவின் மொத்த ஜிடிபி -யில் சுமார் பத்து சதவீதத்தைப் பொருளாதார மேம்பாட்டிற்காக ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார். சுமார் 220 லட்சம் கோடி ஜிடிபி மதிப்பை அடிப்படையாக வைத்து அதிலிருந்து 20 லட்சம் கோடி ரூபாயை இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளதாகப் பிரதமர் அறிவித்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்தத் திட்டத்தை ஐநா பாராட்டியுள்ளது.
உலக பொருளாதார நிலைமை மற்றும் திட்டமிடல் அறிக்கை குறித்து ஐ.நா.வின் உலகளாவிய பொருளாதாரக் கண்காணிப்பு பிரிவின் தலைவர் ஹமீத் ரஷீத்திடம், இந்தியாவின் பொருளாதார ஏற்பட்டு நடவடிக்கைகள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "இந்தியாவின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமான ரூ .20 லட்சம் கோடியை நிதி தொகுப்பாக அரசு அறிவித்துள்ளது. இதுவரை வளரும் நாடுகள் அறிவித்ததில் இதுதான் அதிகம். ஏனெனில் பெரும்பாலான வளரும் நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 முதல் 1 சதவீதம் வரையிலேயே நிதி தொகுப்புகளை அறிவித்துள்ளன. இந்தியாவில் உள்நாட்டு நிதிச் சந்தையும், அந்த நிதித்தொகுப்பைப் பயன்படுத்தும் திறனும் அதிகம் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.