அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அடுத்த மாதம் காணொளி வாயிலாக ஜனநாயக உச்சி மாநாட்டை நடத்தவுள்ளார். இந்த மாநாட்டிற்கு இந்தியா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட 110 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, ஆனால் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
அதேபோல் துருக்கி, எகிப்து, சவுதி அரேபியா, ஜோர்டான், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் தைவானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு தைவானை தனக்கு சொந்தமான பகுதி என கூறி வரும் சீனா, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
"அமெரிக்காவின் நடவடிக்கைகள், அதன் புவிசார் அரசியல் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வது, மற்ற நாடுகளை ஒடுக்குவது, உலகைப் பிளவுபடுத்துவது, சொந்த நலன்களை ஈடேற செய்வது ஆகியவற்றை மறைப்பதற்கான திரையாகவும், அவற்றை செய்வதற்கான கருவியாகவும் ஜனநாயகம் இருப்பதையே காட்டபோகிறது" என சீனா கூறியுள்ளது.
சர்வாதிகாரத்தை எதிர்த்தல், ஊழலை எதிர்த்து போராடுதல், மனித உரிமைகளுக்கான மரியாதையை ஊக்குவித்தல் ஆகிய போன்று கருப்பொருளில் இந்த ஜனநாயக உச்சி மாநாடு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.