Skip to main content

நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களை மீட்ட பாகிஸ்தான் கடற்படை!

Published on 30/04/2018 | Edited on 30/04/2018

படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் மீட்டு நெகிழவைத்துள்ளனர்.

 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள், ஆழ்கடலில் மீன்பிடிக்க சில தினங்களுக்கு முன்னர் கடலுக்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் சென்ற படகின் எஞ்சின் பழுதானதால், நடுக்கடலில் எந்தவித உதவியும் கிடைக்காமல் அவர்கள் 9 நாட்களாக தவித்துள்ளனர். இதனிடையே அந்தவழியாக வந்த பாகிஸ்தான் கடற்படை வீரர்கள், மீனவர்களின் படகை சோதனையிட்டு, அவர்களுக்கு உரிய உதவிகளை வழங்கியுள்ளனர். 

 

இதுகுறித்து பாகிஸ்தான் கடற்படையின் ட்விட்டர் பக்கத்தில், ‘ஏடன் வளைகுடா பகுதியில் பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த அலிம்கர் படகு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடலில் உதவி கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த படகு மீட்கப்பட்டது. சோதனை நடத்தியதில் செயிண்ட் மேரி என்ற பெயர் கொண்ட அந்தப் படகில் குளச்சல் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வந்தது தெரிய வந்துள்ளது’ என பதிவிடப்பட்டிருந்தது.

 

 

ஒரு வாரத்திற்கும் மேலாக உணவு, குடிநீர் கிடைக்காமல் இருந்த மீனவர்களுக்கு, பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் தகுந்த உதவி அளித்து நெகிழச் செய்துள்ளனர். மேலும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததோடு, அவர்களது படகு எஞ்சினையும் பழுதுபார்த்து அனுப்பியுள்ளனர். கடலில் சிக்கித்தவித்த மீனவர்கள் இந்திய கடற்படை தகவலளித்தும் எந்தவிதமான உதவியும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். மனிதநேய அடிப்படையில் இந்த உதவியைச் செய்ததாக கூறியிருக்கும் பாகிஸ்தான் கடற்படைக்கு, தமிழக மீனவர்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்