ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக துப்பாக்கிச்சூடு மோதல் நடந்து வருகிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மீர்பூருக்கு பாகிஸ்தானுக்கான இங்கிலாந்து தூதர் ஜேனி மேரியட், கடந்த 10ஆம் தேதி சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், இது தொடர்பான புகைப்படங்களை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அந்த பதிவில், “இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் மக்களின் இதயமான மிர்பூரில் இருந்து வணக்கம். 70 சதவீதம் பேர் இங்கிலாந்தில் உள்ள பாகிஸ்தானியர்களில் மிர்பூரைச் சேர்ந்தவர்கள். புலம்பெயர்ந்தோரின் நலன்களுக்கு நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றுவது மிகவும் முக்கியமானது” என குறிப்பிட்டு அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜேனி மேரியட்டன் செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு ஜேனி மேரியட்டன் சென்றது கடும் கண்டனத்துக்குரியது. இந்தியாவின் இறையான்மைக்கு எதிரான இத்தகைய மீறல் ஏற்று கொள்ள முடியாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.