துருக்கி நிலநடுக்கத்தின் போது இடிந்துவிழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கிய நான்கு வயது சிறுமி மூன்று நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார்.
துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில் கடல் பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது. ரிக்டர் அளவில் ஏழாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் காரணமாக துருக்கியின் பல பகுதியில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. குறிப்பாக போர்னோவா, பைராக்சி ஆகிய நகரங்களிலும் ஏராளமான கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் சேதம் அடைந்தன. நிலநடுக்கத்தால் சேதம் அடைந்துள்ள கட்டிட இடிபாடுகளுக்குள் அதிகமானோர் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், இதுவரை 93 பேர் பலியாகியுள்ளதாகவும், 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கிய நான்கு வயது சிறுமி மூன்று நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார். மூன்று நாட்களாக இடிபாடுகளில் சிக்கியிருந்த அந்தச் சிறுமியைப் பாதுகாப்புப் படையினர் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதே விபத்தில் சிறுமியின் ஆறு வயதான சகோதரன் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.