கரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 1169 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,000 ஐ கடந்துள்ளது. இந்தியாவிலும் தற்போது வேகமாகப் பரவிவரும் இந்த கரோனா வைரஸ் 2000க்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளது. இதில் 56 பேர் உயிரிழந்துள்ளனர், 190 பேர் குணமாகியுள்ளார்.
உலக அளவில் அதிகபட்சமாக இத்தாலியில் 13,915, ஸ்பெயினில் 10,348, அமெரிக்காவில் 6,070, பிரான்சில் 5,387 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும், 2,12,018 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த வைரஸ் அமெரிக்காவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில்,அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே 1169 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.கரோனாவால் 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் பதிவான அதிகபட்ச இறப்பு எண்ணிக்கை இதுவே ஆகும். இதனையடுத்து அந்நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6000 ஐ கடந்துள்ளது. இதுவரை அமெரிக்காவில் 2.45 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 10,400 பேர் குணமடைந்துள்ளனர்.