ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலும் தாலிபன்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்ததையடுத்து, அந்தநாடு முழுவதும் தாலிபன் வசமாகியுள்ளது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் போர் முடிவுக்கு வந்ததாக தாலிபன்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் ஆட்சியமைக்கும் முயற்சியிலும் தாலிபன்கள் ஈடுபட்டுள்ளனர். தாலிபன்கள் அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவரான முல்லா அப்துல் கனி பரதர், ஆப்கானிஸ்தானின் புதிய பிரதமராக அறிவிக்கப்படவுள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில் தாலிபன்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்கிடையே நியூசிலாந்து, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தமது குடிமக்களை அழைத்து வர விமானங்களை அனுப்பி வந்தன. இந்தநிலையில் தற்போது விமான நிலையத்தில் மக்கள் குவிவதை தடுக்கும் விதமாக அனைத்து வர்த்தக விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் மட்டுமின்றி, இந்தியா உட்பட பல்வேறு நாட்டு குடிமக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காபூல் விமான நிலையத்தை மூடுவதற்கு முன்னதாக, விமான நிலையத்தில் திரண்ட ஆப்கானிஸ்தானியர்களை கட்டுப்படுத்த அமெரிக்க வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் ஐந்து பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே ஆப்கானிஸ்தானின் இந்த நிலைக்கு காரணம் அமெரிக்காதான் எனக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆப்கானிஸ்தான் மக்கள் இன்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக அவர்கள் கோஷத்தையும் எழுப்பி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் ஊடகவியலாளர், "20 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் 2000-க்கே சென்றுவிட்டோம். எங்களுக்கு அமைதி தேவை. தாலிபன் ஆட்சி அமைந்தால், ஆயிரக்கணக்கான பின்லேடன்களும், முல்லா உமர்களும் உருவாவார்கள்" எனத் தெரிவித்தார்.