2 நாட்களுக்கு மேலாக சிட்னி புறநகர் காட்டுப் பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீயால் அங்கு அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது அந்நாட்டு அரசு.
ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் தொடர்ந்து எரிந்துவரும் காட்டுத்தீயால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறிவரும் நிலையில், சுமார் 150 வீடுகளுக்கும் மேல் எரிந்து தரை மட்டமானதோடு, 3 பேர் இதில் சிக்கி பலியாகியுள்ளனர். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சூழலில் அடுத்தசில நாட்களுக்கும் கடும் வெயில் நிலவும் என்பதால் அரசாங்கம் அப்பகுதிகளில் ஏழு நாட்களுக்கு அவசரநிலையை அறிவித்துள்ளது. காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் அப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் 575 க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டதுடன், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொழுந்துவிட்டு எரியும் இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.