சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், மதுரவாயல் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கோவூர் பகுதியை சேர்ந்த ஏனோக்(29) என்ற இளைஞர் அந்த பெண்ணை காதலிக்குமாறு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். இளம்பெண் செல்லும் இடமெங்கும் பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அந்த பெண் இவரது காதலை ஏற்க மறுத்து வந்துள்ளார்.
இருப்பினும் விடாது காதலிக்குமாறு ஏனோக் வற்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தான் நேற்று முன்தினம்(7.1.2024) அந்த பெண் பணியை முடித்துவிட்டு அவரது நிறுவனத்தின் முன்பு நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஏனோக், அந்த பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு அவர் மீண்டும் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த ஏனோக் அந்த பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார். அத்துடன் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஏனோக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலிக்குமாறு பெண்ணை வற்புறுத்தித் தாக்கிய இளைஞரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.