Skip to main content

கர்நாடகாவின் யார்கோல்  அணை... கட்டுமானப் பணியில் தமிழர்கள்!  

Published on 05/07/2021 | Edited on 05/07/2021

 

Yarkol Dam in Karnataka ... Tamils ​​in construction!

 

தென்பெண்ணை ஆற்றின் மார்க்கண்டேய நதிக்கு குறுக்கே கர்நாடக அரசு கட்டியுள்ள புதிய அணைக்கான கட்டுமானப் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அண்மையில் கரோனா கால ஊரடங்கு நேரத்தில் யாருக்குமே தெரியாமல் மார்க்கண்டேய நதிக்கு குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அருகில் 121 கல்குவாரிகள் உள்ளன. பெங்களூரு தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், அவர்களது பினாமிகள் பெயரில் இந்தக் கல்குவாரிகளை ஒப்பந்த அடிப்படையில் ஏலம் எடுக்கப்பட்டு, தமிழ்நாட்டின் கனிம வளங்களை வெட்டி கர்நாடக மாநிலத்திற்கு எம் சாண்ட், ஜல்லி என லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது.

 

Yarkol Dam in Karnataka ... Tamils ​​in construction!

 

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஒன்றியம் நாச்சிக்குப்பம் கிராமத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்நாடக மாநில வனப்பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே யார்கோல் என்னும் இடத்தில் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பில் அரை டிஎம்சி அளவு தண்ணீர் சேமித்துவைக்கும் வகையில் 50 மீட்டர் உயரமும், 430 மீட்டர் நீளமும் கொண்ட அணையைக் கட்டியுள்ளது.

 

இந்தக் கட்டுமானப் பணிக்கு எம் சாண்ட், சிமெண்ட், ஜல்லி போன்றவை தமிழ்நாட்டில் உள்ள ஆலைகளில் இருந்து சென்றுள்ளதும், அணை கட்டுமானப் பணிக்கு தமிழ்நாட்டில் இருந்துதான் கட்டட தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அணை கட்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த ராங்கி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற நிறுவனம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 வகையான காண்ட்ராக்டர்களுக்குத் துணை ஒப்பந்தம் கொடுத்துள்ளது. குறிப்பாக ஓசூர், தளி, கிருஷ்ணகிரி, சேலம் போன்ற இடங்களைச் சேர்ந்தவர்கள்தான் துணை ஒப்பந்ததாரர்களாக ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த அணையால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தகவல் தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்