தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் கவுன்சில் கூட்டுறவு சங்கத்தின் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் கூட்டுறவு சங்க தேர்தல் ஏப்ரல் 13ம் தேதி நடத்தப்படும் என கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலை நேர்மையாக, வெளிப்படையாக நடத்த உத்தரவிடக் கோரி சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜஸ்ரீபதி, தியாகராய நகரைச் சேர்ந்த அன்பு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுக்களில், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளன்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற போது அலுவலகத்தில் எவரும் இல்லை எனவும், தாங்கள் போட்டியிடக் கூடாது என்பதற்காகவே நிர்வாகிகள் இச்செயலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது அப்போது , கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், சம்மந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்துவைத்தார்.