Skip to main content

"அவரை காப்பாத்த முடியல... என் அதிகாரமும் பணமும் தோத்துப்போச்சு!!!" - மயான வளாகத்தில் நெகிழ்ச்சி உரையாற்றிய இமையம்!

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

s.ramakrishnan

 

க்ரியா பதிப்பகத்தின் நிறுவனர் எஸ்.ராமகிருஷ்ணன் சமீபத்தில் மரணமடைந்தார். தமிழ் இலக்கிய வாசகர்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது பூதவுடல் தகனம் செய்யப்பட்ட பெசன்ட் நகர் மின்மயான வளாகத்தில் நின்று, எழுத்தாளரும், திமுகவைச் சேர்ந்தவருமான இமையம் கண்ணீர் மல்க உருக்கமாகப் பேசும் காணொளி ஒன்று இணையத்தில் தமிழிலக்கிய வாசகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

அதில் அவர் பேசியது...

 

" 'மீள முடியுமா' என்ற அவரது பதிப்பகப் புத்தகத்தை ஒரு பெட்டிக்கடையில் பார்த்து, யார் இவ்வளவு அழகாகப் புத்தகம் போட்டது என்று யோசித்தேன். 1986 கால கட்டத்தில், நான் நாவல் எழுத ஆரம்பித்தேன். நாம் புத்தகம் போட்டால், இவரிடம்தான் போட வேண்டும் என்று முடிவெடுத்தேன். அப்போது எனக்கு க்ரியா, எஸ்.ராமகிருஷ்ணனையெல்லாம் யாரென்று தெரியாது. அதன்பிறகு பல பதிப்பகங்களில் இருந்து என்னுடைய புத்தகத்தை வெளியிட அழைப்பு வந்தது. நான் யாருடனும் போகவில்லை.

 

ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. விதி என்று நினைக்கிறேன். அன்று எடுத்த முடிவில் இருந்து இன்று வரை அதில் உறுதியாக இருந்திருக்கிறேன். அவருக்கும் எனக்கும் இடையே 30 ஆண்டுகால பழக்கம் உள்ளது. 1991 -ஆம் ஆண்டு ராயப்பேட்டையில் இருந்த அவரது அலுவலகத்திற்குச் சென்றேன். காலை 11 மணிக்கு வரச் சொல்லியிருந்தார். நான் 11.02-க்கு போனேன். 'நான் என்ன உனக்கு வேலைக்காரனா? உனக்காகக் காத்திருக்கணுமா?' என்று கேட்டார். அதிலிருந்து அவர் 10 மணி என்று சொன்னால் நான் 9.58-க்கு முன் சென்று விடுவேன். அவருக்கு ஏத்த மாதிரிதான் நான் மாறியிருக்கிறேன்.

 

நான் 30 வருடம் அரசியலில் இருந்திருக்கிறேன். பல இடங்களில் அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கிறேன். ராமகிருஷ்ணனை காப்பற்ற எனது அனைத்து அதிகாரமும் பணமும் தோற்றுப்போய்விட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேதியிலிருந்து தி.மு.க எம்பி-யான கனிமொழி தினமும் இருமுறை ஃபோன் செய்து விசாரிப்பார். திலகவதி, நாகேந்திரன் IAS என அனைவரும் அவரவரால் முடிந்ததைச் செய்தனர். மாவட்டச் செயலாளராக இருக்கிற என் அண்ணன், உதயநிதியிடம் பேசி அவரால் செய்ய முடிந்ததைச் செய்தார். அவ்வளவு ஃபோன் கால்கள் வந்துகொண்டே இருந்தன. மருத்துவமனையில் வேலை பார்ப்பவர்கள் "எங்களை நீங்கள் ரொம்ப டார்ச்சர் செய்கிறீர்கள்" என்று சொன்னார்கள். அவர் எவ்வளவு முக்கியமான ஆள் என்று சொல்லி அவர்களுக்குப் புரியவைத்தோம். எனது உடல்நிலை குறித்துக் கேட்டு, அவர்கள் உங்களை தொந்தரவு செய்வார்கள், அதைப் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று ராமகிருஷ்ணன் மருத்துவமனை டீனுக்குக் கடிதம் எழுதினார். இதுதான் ராமகிருஷ்ணன்.

 

cnc

 

முப்பது வருடத்தில் எங்களுக்குள் சண்டை வந்ததேயில்லை. கசப்பாக ஏதும் கூறியதேயில்லை. அவர் கூறிய அத்தனையையும் பின்பற்றினேன். 30 வருடங்களில் நான் அவருக்காகக் காத்திருந்திருக்கிறேன். இப்போது அவர் எனக்காக ஒரு மணி நேரம் காத்திருந்திருக்கிறார். இலக்கியத்தை எப்படி எழுத வேண்டும், மொழியை எப்படிக் கையாள வேண்டும் என்பதை அவர்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தார். மொழி சார்ந்து செயல்படுகிறவர்களுக்கு சாவே கிடையாது. மனிதக்குலம் தோன்றியதிலிருந்து பல பேர் இறந்து போயிருக்கிறார்கள். மொழியை உயிர்ப்பிக்கணும் என்று நினைப்பவர்கள் என்றும் மரணமடைய மாட்டார்கள்".

 

 

 

சார்ந்த செய்திகள்