Skip to main content

விவசாயியைக் கொன்ற யானை! 

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

Farmer passes away by elephant

 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே புதுவடவள்ளி அட்டமொக்கை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி(63). விவசாயி. இவருக்கு திருமணமாகி, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

 

ராமசாமி, அதே பகுதியில் சொந்தமாக ஒன்றரை ஏக்கர் நிலம் வைத்து பயிரிட்டுள்ளார். வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் அடிக்கடி யானை ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதை அடுத்து விவசாயிகள் இரவு நேரங்களில் தங்கள் தோட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அதன்படி ராமசாமி நேற்று இரவு வழக்கம் போல் தனது விவசாய தோட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வந்தார். தோட்டத்தில் அவர் நாய் வளர்த்து வந்தார். இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் ராமசாமி தோட்டத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நாய் குரைக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்தார். அப்போது ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி ராமசாமி தோட்டத்திற்குள் வந்து பயிர்களை சேதப்படுத்திக் கொண்டிருந்தது. 

 

யானையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமசாமி, தப்பியோட முயன்றார். ஆனால் அதற்குள் யானை அவரை தூக்கி வீசி அவரது காலில் மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே ராமசாமி பரிதாபமாக இறந்தார்.

 

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ராமசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யானை தாக்கி உயிரிழந்த ராமசாமி குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கப்பட்டது. தொடர்ந்து மீதி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். விவசாயியை யானை மிதித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'காமராஜருடன் ஸ்டாலினை ஒப்பிடுவது என்ன தவறு?'- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
 'What is wrong with comparing Stalin with Kamaraj?'- E.V.K.S. Elangovan interview


'விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியினர் டெபாசிட் இழப்பார்கள்' என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''சென்னையில் கடந்த 11-ந்  தேதி காமராஜர் இல்லத்தில் காங்கிரஸ் கூட்டத்தில் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எல்லோரும் காங்கிரஸ் வளர்க்க வேண்டும் என்றும், நடைபயணம் செல்ல வேண்டும், அதிக அளவில் பூத் கமிட்டி அமைக்கப்பட்ட வேண்டும், இளைஞர்களை அதிக அளவில் காங்கிரஸ் கட்சியில் சேர்க்க வேண்டும் எனவும் பேசினார்கள். காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும்போது கூடுதலாக இரண்டு வாரத்தை பேசினார். அதைப் பற்றிய விவாதம், பிரச்சனை முடிந்து விட்டது. அவர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று சொல்லும் போது அவர் சொன்னதை ஏற்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டாம் என முன்னாள் எம்.பி. ஒருவர் கருத்து சொன்னார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் போது கூட்டணி வைத்தால்தான் வெற்றிபெற வாய்ப்பு கிடைக்கும். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பல இடத்தில் மேயர், கவுன்சிலராக இருப்பதற்கு கூட்டணிதான் காரணம். கூட்டணியில் சலசலப்பு இருக்கதான் செய்யும். வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து தான் காங்கிரஸ் போட்டியிடும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மக்கள் பணியாற்றி வருகிறார். பொற்கால ஆட்சி என்று சொல்வதற்குப் பதிலாக இந்த ஆண்டு நவீனத்திற்கு ஏற்ப ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி என்று சொன்னேன்.

தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் படித்தவர்களாக இருப்பதற்குக் காரணம் காமராஜர். அவர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். தற்போது எத்தனையோ நிதி நெருக்கடி இருக்கும் சூழலிலும் அனைத்து அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.  மதிய உணவு தந்த காமராஜருடன் காலை உணவு தந்த ஸ்டாலினை ஒப்பிடுவது என்ன தவறு? தமிழகத்தில் உள்ள தாய்மார்கள் ஸ்டாலின் பின்னால் நிற்கிறார்கள். நான்கு முனை போட்டியில் வாக்குகள் சிதறத் தான் செய்யும். கடந்த தேர்தலில் மூன்று முனை போட்டி ஏற்பட்டது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில்  பா.ம.க,பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம் போன்றவர்களால் தான் பா.ஜ.க.வுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழிசை சவுந்தரராஜனை அமித்ஷா மேடையில் திட்டி எச்சரிக்கை செய்தால் அது கண்டிக்கத்தக்கது. கட்சி பாகுபாடு இன்றி அவர் தமிழச்சியாக இருப்பதால் இந்த விவகாரத்தில் நான் கண்டிக்கிறேன்.

முஸ்லிம்கள் 25 சதவீதம் பேர் உள்ள நிலையில் ஒருவருக்கு கூட பா.ஜ.க சீட் கொடுக்கவில்லை. அப்படி இருக்கும் போது இந்தியாவுக்கு எப்படி பொதுவான அரசாக இருக்க முடியும். காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும்.நீட் தேர்வு குளறுபடி காரணமாக தான் முதல்வர் ஸ்டாலின் ஆரம்பம் முதல் நீட் வேண்டாம் என்றார். தற்போது கேட்டால் காங்கிரஸ் தான் நீட் தேர்வு கொண்டு வந்தது என்பார்கள். காங்கிரஸ் நீட் தேர்வு கொண்டு வந்த போது மாநிலங்கள் விருப்பத்தின் பேரில் நடந்து கொள்ளலாம் என்று சொன்னது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியினருக்கு டெபாசிட் கூட கிடைக்காது. காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் செல்வப்பெருந்தகை, நானும் பிரச்சாரம் செய்வோம். நாம் தமிழர் கட்சி மாநில அந்தஸ்து பெற்றது வரவேற்கிறேன். நெல்லை காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் உடனடியாக எப்படி குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும்.காவல்துறையினர் கைது செய்தால் தான் உண்மை என்னவென்று தெரிய வரும். இன்னும் மோடி தலைமையிலான ஆட்சி 5 மாதங்களில் கலைந்துவிடும். இதற்கு பா.ஜ.க கூட்டணியில் உள்ள கட்சிகளே காரணமாக இருக்கலாம்''என்றார்.

Next Story

மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கும் மருத்துவர்; திடீர் போராட்டத்தால் பரபரப்பு!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Complaints that fracture doctor inselt special people

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் மூலம் உடல் பரிசோதனை செய்து உடலில் உள்ள குறைபாடுக்கேற்ப சதவீத அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்று திறனாளிகளுக்கான அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். 

இந்நிலையில் இன்று வழக்கம் போல நடைபெற்ற மருத்துவ முகாமிற்குத் தாளவாடிக் கோபி பவானி உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக மருத்துவ பரிசோதனை செய்யவில்லை என்றும் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பதாகப் புகார் தெரிவித்து அரசு மருத்துவமனை வளாகம் முன்பு 20-க்கும் மேற்பட்ட மாற்றத்தினாளிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மலைப்பகுதியிலிருந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பிரச்சனை செய்து முறையாகச் சான்றிதழும் வழங்கப்படுவதில்லை என்றும் புகார் கூறினர். 

இது குறித்து சுகாதார இணை இயக்குநரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாற்றுத்திறனாளிகள் குற்றம் சாட்டினர். இதற்குப் பின்னர் அரசு மருத்துவமனை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி உடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததைடுத்து மாற்றுத்திறனாளிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் முறையாக நடத்தப்படுவதில்லை எனப் புகார் கூறி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது