திருவொற்றியூர் கலைஞர் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் தயாளன்(73) நத்தின்னா தம்பதியினர். மின் வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் தயாளன். இவர்களுக்கு நந்தினி என்ற மகளும் கோபி என்ற மகனும் உள்ளனர். கடந்த மே மாதம் கணவன் மனைவி இருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் தயாளன் குணமடைந்த நிலையில் கடந்த மே மாதம் எட்டாம் தேதி நத்தின்னா சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இதனால் மனைவி இறந்த துக்கம் தாள முடியாமல் தினமும் மன வேதனையில் இருந்து வந்துள்ளார் தயாளன். அவர் தனது மனைவியை மறக்க முடியாமல் அடிக்கடி அவரை பற்றி பலரிடமும் பேசியுள்ளார். இந்நிலையில் நேற்று(06.10.2021) மகாளய அமாவாசை என்பதால், தன் மனைவியின் படத்தை வைத்து பூஜை செய்துள்ளார். தனது மனைவி இறந்ததை எண்ணி நேற்று மிக வருத்தத்தில் இருந்துள்ளார். இன்று காலை வழக்கம் போல் தயாளனுக்கு டீ கொடுப்பதற்காக மகள் நந்தினி அவரது அறையை திறந்துள்ளார். அப்பொழுது அவரது அறையில் இருந்த மின்விசிறி கொக்கியில் மனைவியின் புடவையால் தூக்கு மாட்டி தயாளன் தற்கொலை செய்து தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்.
இதை பார்த்து கதறிய மகளின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சாத்தாங்காடு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மனைவி இறந்த துக்கத்தில் இருந்து மீளாமல் ஒய்வுபெற்ற அரசு அதிகாரி தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.