தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில், எந்தெந்த தொகுதிகள் வருகின்றன என இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ பட்டியலை, கடந்த அக்டோபர் 22ஆம் தேதி வெளியிட்டது. அதில் வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாகியுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில், 'திருப்பத்தூர்', 'ஜோலார்பேட்டை', 'வாணியம்பாடி', 'ஆம்பூர்' என 4 தொகுதிகள் உள்ளன. இதில் ஏன் ஒரு தொகுதி கூட பட்டியலின மக்களுக்கான ரிசர்வ் தொகுதியில்லை என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது காங்கிரஸ் கட்சி.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மைப் பிரிவு தலைவர் வாணியம்பாடி அஸ்லம்பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் 'ராணிப்பேட்டை', 'வேலூர்', 'திருப்பத்தூர்' என மூன்றாகப் பிரிக்கப்பட்டது. இதில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு என 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த மாவட்டத்தில், 'அரக்கோணம்' தனித் தொகுதியாக உள்ளது. வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, கே.வி. குப்பம் மற்றும் குடியாத்தம் என ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த மாவட்டத்தில், 'கே.வி.குப்பம்', 'குடியாத்தம்' என இரண்டு சட்டமன்ற தனித் தொகுதிகள் உள்ளன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் என நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் 'பொது'த் தொகுதிகளாக உள்ளன. இந்தத் திருப்பத்தூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தொகை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், அதனை அங்கீகரிக்கும் வகையிலும் ஏதாவது ஒரு தொகுதியைத் தனித் தொகுதியாக அறிவிக்க வழிவகை செய்ய வேண்டும்" என அந்த அறிக்கையில் கோரிக்கை வைத்துள்ளார்.