திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் தீபத்திருவிழா மிக முக்கியமானது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பரணி தீபம், மகாதீபம். இதனைக்காண கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்றால் பாஸ் வைத்திருந்தால் மட்டும்மே காவல்துறை உள்ளே அனுமதிக்கும். பாஸ் இல்லையேல் அனுமதிக்காது.
அரசின் புரோட்டாக்கால்படி உள்ளவர்களையும் கோயிலுக்குள் அனுமதிக்கும். அப்படி அனுமதிக்க வேண்டும் என்றாலும் கோயில் சார்பில், அவர்களுக்கான சிறப்பு பாஸ்களை வழங்க வேண்டும். அந்த வரிசையில் மக்கள் பிரதிநிதிகளாக இந்த மாவட்டத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு சிறப்பு பாஸ் மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மற்ற பாஸ் வழங்கும் மாவட்ட நிர்வாகம்.
அந்த வகையில் எம்.எல்.ஏக்களுக்கு பாஸ்களை வழங்கிய கோயில் நிர்வாகம், திருவண்ணாமலை தொகுதி எம்.பியான அண்ணாதுரைக்கு பாஸ் வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது. இது தொடர்பாக தீபத்திருவிழா முடிந்த நிலையில், டிசம்பர் 14ந்தேதி எம்.பி அண்ணாதுரையின் சார்பில் அவரது ஆதரவாளர்கள் கோயில் இணை ஆணையர் ஞானசேகரனிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. அவர் முறையாக பதில் சொல்லவில்லையாம்.
அதிமுகவை சேர்ந்தவர்கள் எந்த பொறுப்பிலும் இல்லாதவர்கள் எல்லாம் தீபத்திருவிழாவில் கோயிலுக்குள் உட்கார்ந்து அதிகாரம் செலுத்தினார்கள், சர்வ சாதாரணமாக கோயிலுக்குள் சென்றார்கள். அப்படியிருக்க இந்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியான எம்.பிக்கு பாஸ் வழங்காதது ஏன் ?. என கேள்வி எழுப்பினர். அதோடு, பாஸ் யாருக்கு தருவது என்பதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான இந்த மாவட்டத்தை சேர்ந்த சேவூர்.ராமச்சந்திரன்தான் முடிவு செய்தார் என்கிறார்கள் அதிகாரிகள் தரப்பில்.
அமைச்சர் அப்படி செய்திருந்தால் அவர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். கோயில் என்பது பக்திக்கானது. அரசியல் செய்யும் இடமல்ல என்கின்றனர் திமுகவினர்.