Skip to main content

'டி23' எங்கே...? தளர்த்திய வனத்துறை... மக்களுக்கு எச்சரிக்கை!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

 Where is 'T23 ...? Forest Department loosens search!

 

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவன் எஸ்டேட் பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்துவந்த 'டி23' புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் பணி 14 ஆவது நாளாக வனத்துறை மேற்கொண்டு வரும் நிலையில், தற்பொழுது புலியைப் பிடிக்கும் பணி தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த சம்பவத்தில் புலியைச் சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டிருந்தாலும் வனத்துறை மயக்க ஊசி செலுத்தியே புலியைப் பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இந்நிலையில் புலி மசினகுடியின் சிங்காரா வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்ததாக வனத்துறை தெரிவித்திருந்தது. அதனையடுத்து கும்கி யானைகளை வைத்து புலியைப் பிடிக்க முயன்ற வனத்துறை அதனைக் கைவிட்டு, காடுகளில் மரங்கள் மேல் பரண் அமைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதேபோல் தானியங்கி கேமராக்களும் பொருத்தப்பட்டு புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கேமராவில் புலியின் நடமாட்டம் இல்லாததால் பரண் அமைத்துத் தேடுதல் நடத்தும் முறையை வனத்துறை கைவிட்டுள்ளது. முன்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வனத்துறையினரை விடக் குறைந்த பணியாளர்களே தற்பொழுது புலியைத் தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.

 

 Where is 'T23 ...? Forest Department loosens search!

 

ஒருவேளை மீண்டும் புலி கூடலூர் பகுதிக்கே  சென்றிருக்கலாம் எனச் சந்தேகித்துள்ள வனத்துறை, 'டி23' உணவு சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆவதால் மீண்டும் கால்நடைகளை வேட்டையாட வனத்தை ஒட்டியுள்ள பகுதிக்கு மீண்டும் வரலாம் எனவே  அதுவரை புலியைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. இருப்பினும் வனத்தை ஒட்டிய பகுதிகளுக்குக் கால்நடைகளை மேய்க்கச் செல்லவேண்டாம் என வனத்துறை அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்புலி இதுவரை நான்கு பேரையும், 30க்கு மேற்பட்ட கால்நடைகளையும் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்பதாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தகது.