
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் இரும்புடன் கூடிய சுடுமண் தக்களி உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் இரண்டாம் கட்டமாக அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதில் நெசவு தொழிலுக்கு பயன்படுத்தப்படும் சுடுமண்ணால் செய்யப்பட்ட தக்களி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சங்கு வளையல் செய்யும் தொழில் கூடம் அங்கு இருந்ததற்கான சான்றுகள் கிடைத்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தக்களியின் மூலம் அங்கு நெசவு தொழிலும் நடைபெற்றது உறுதியாகி உள்ளது.
வெம்பக்கோட்டையில் மேலும் தொல்லியல் ஆய்வுகளை தொடர இருப்பதாக தொல்லியல் ஆய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுவரை வெம்பக்கோட்டையில் கண்ணாடி மணிகள், சுடுமண் காதணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடை, சங்கு வளையல் உள்ளிட்ட பல தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.