Skip to main content

கஞ்சா புகாரில் மோதிக்கொண்ட இருதரப்பு; கலவரக்காடான காவல்நிலையம்

Published on 20/06/2023 | Edited on 20/06/2023

 

 Two sides clash over ganja complaint; Riot police station

 

சேலத்தில் கஞ்சா விற்பனைக்கு எதிராக புகார் அளித்தவரும், புகாருக்கு உள்ளானவர்களும் காவல்நிலைய வாசலிலேயே கொடூரமாக தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே கஞ்சா மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக புகார்கள் எழுந்தது. ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த செந்தில், சத்யராஜ் ஆகிய இருவர் ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பதாக ஊராட்சி மன்ற தலைவராக உள்ள கண்ணன் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இதுதொடர்பாக காவல் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் மீண்டும் புகாரளித்த நிலையில் காவல் நிலையத்திற்கு வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த கண்ணன் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவர்களை தாக்கினர்.

 

அதேநேரம் கண்ணன் தரப்பினரும் அவர்களை தாக்கினர். இதனால் சிறிது நேரத்தில் காவல்நிலைய வளாகமே கலவரக்காடாக மாறியது. இந்த தாக்குதலில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கண்ணனின் மண்டை உடைந்தது. இரண்டு பேர் படுகாயம் அடைந்த நிலையில் மூவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவலர்கள் முன்னிலையில் கஞ்சா வியாபாரிகளும், புகார் சொன்னவர்கள் தரப்பும் மோதிக்கொண்ட சம்பவம் ஆட்டையாம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பான காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதல் திருமணம்; காவல் நிலையத்தின் முன்பு நடந்த மோதலால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
 Excitement due to the previous conflict at the police station for love marriage

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த, திம்மம்பேட்டை அடுத்த புல்லூர் பகுதியை சேர்ந்தவர் இளைஞர் முருகன். இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சில மாதங்களிலேயே, இவரது மனைவி தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர் முருகனுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த 21 வயதான அபிநயா ஶ்ரீ என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்களது காதல் விவகாரத்தை அறிந்த, பெண் வீட்டார், அந்த பெண்ணிடம் காதலை கைவிடுமாறு எச்சரித்துள்ளனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், காதலர்கள் இருவரும் கடந்த 24 ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி பழனி சென்று அங்குள்ள முருகர் கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து, அவர்கள் இருவரும் பொள்ளாச்சி பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளனர். இதற்கிடையே, கடந்த 26 ஆம் தேதி பெண்ணின் பெற்றோர்கள் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தனர். 

அவர்கள் அளித்த புகாரின் பேரில், இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், காதலர்களின் செல்போனை எண்ணை ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து, காதலர்களின் செல்போன் சிக்னலை வைத்து பொள்ளாச்சியில் தங்கியிருந்தவர்களை போலீசார் கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, இரு தரப்பினரை சேர்ந்தவர்கள் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் காவல் நிலையம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து, காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் இருவரும் ஒன்றாக செல்வதாக விருப்பம் தெரிவித்ததால், போலீசார் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.