ஈரோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.53 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டப்பட்டது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகத்தில் மூன்று தளங்களில் 292 - க்கும் மேற்பட்ட துணிக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. முன்னுரிமை அடிப்படையில் ஜவுளி வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கப்பட்டது. அப்போதே வைப்பு தொகை, வாடகை தொகை அதிகமாக இருப்பதாக வியாபாரிகள் கூறி வந்தனர்.
இந்நிலையில் வைப்புத் தொகையாக ரூ. 50 ஆயிரம், மாதம் தரும் வாடகை ரூ.3 ஆயிரம் (18 சதவீத ஜி.எஸ்.டி உட்பட)செலுத்துமாறு அப்போதைய மாநகராட்சி ஆணையாளராக இருந்த சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்திருந்தார். இதன்படி வியாபாரிகள் வைப்புத் தொகை செலுத்தி வாடகை செலுத்தி வந்தனர். இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு வாடகையை திடீரென ரூ.3, 560 ஆக மாநகராட்சி உயர்த்தியது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது சரியான பதில் இல்லை.
இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறும்போது, எவ்வித முன்னறிவிப்பு இன்றி வாடகையை மாநகராட்சி உயர்த்தி உள்ளது. ஏற்கனவே நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். ஜவுளி வணிக வளாகத்தை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்டோர் கடைகள் அமைத்துள்ளனர். வணிக வளாகம் முன்பும் ஏராளமானோர் கடைகள் அமைத்துள்ளனர். இதனால் எங்கள் வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் தீபாவளியை முன்னிட்டு பல லட்சம் மதிப்பில் துணிகளை கடனுக்கு வாங்கி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். தீபாவளி பண்டிகை நம்பி இருந்தோம். அதில் ஓரளவுக்கு நல்ல வியாபாரம் நடைபெறும். அதைப்போன்று இந்த வருடம் தீபாவளிக்கும் கடன் வாங்கி துணிகள் வைத்திருந்தோம். ஆனால் வணிக வளாகத்தை சுற்றி நூற்றுக் கணக்கான கடைகள் அமைக்கப்பட்டதால் எங்களது வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டது.
கனி மார்க்கெட் கடைகளுக்கு மக்கள் வராமல் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதிலிருந்தே இன்னும் நாங்கள் மீளாமல் இருக்கும் நிலையில் தற்போது வாடகையை மாநகராட்சி உயர்த்தி உள்ளது. இது எங்கள் தலையில் இடி விழுந்தது போல் உள்ளது. வாடகை உயர்வு காரணமாக வணிக வளாகத்தில் உள்ள 3 -வது தளத்தில் மொத்தம் 78 கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் 37 கடைகளை சேர்ந்த வியாபாரிகள் தங்களது கடைகளை காலி செய்துள்ளனர். வியாபாரமே ஆகாமல் நஷ்டத்துக்கு கடையை இயக்க முடியாததால் காலி செய்து விட்டனர். இன்னும் சில வியாபாரிகள் கடையை காலி செய்யும் முடிவில் உள்ளனர். உடனடியாக மாநகராட்சி இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்காவிட்டால் அனைத்து வியாபாரிகளும் கடையை காலி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மாநகராட்சி உரியத் தீர்வு காண வேண்டும் என்றனர்.