Skip to main content

குடிகாரர்களிடம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க எவ்வாறு வலியுறுத்த முடியும்? அது சாத்தியமா? தமிமுன் அன்சாரி

Published on 05/05/2020 | Edited on 05/05/2020
 thamimun ansari - mla - mjk - Nagapattinam



தமிழகத்தில் மே 7ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும். சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. இதுபற்றிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 

நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

கடந்த 41 நாட்களாக தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில நிபந்தனைகளுடன் நேற்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன.

ஆனால் முக்கியமாக பின்பற்றப்பட வேண்டிய சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் கூட்டம் கூட்டமாக மக்கள் கடை வீதிகளில்  அலைவதை பார்க்கும்போது இத்தனை நாள் பின்பற்றிய ஊரடங்கின் பயன் வீணாகி கரோனா நோய் தொற்று அதிகரித்து விடுமோ என்ற சமூக கவலை அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
 

எந்தெந்த கடைகளை திறப்பது என்பதிலும், நேர வரையரையிலும் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகள் மே 7 முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது கடும் வேதனையளிக்கிறது.


மதுப்பழக்கம் உள்ளவர்களில் அறுதிப் பெரும்பான்மையினர் மனமாற்றத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில், தமிழக அரசு இவ்வாறு அறிவித்திருப்பது பொது மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.

வழிபாட்டு தலங்களை திறக்கக் கூடாது என்றும், முடிவெட்டும் சலூன் கடைகளை திறக்கக் கூடாது என்றும் கூறி விட்டு, சாராயக் கடைகளை திறக்க அனுமதிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

டாஸ்மாக் கடைகளில் குடிகாரர்களிடம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க எவ்வாறு வலியுறுத்த முடியும்? அது சாத்தியமா? இவையாவும் நிலைமையை மோசமடைய செய்து, முழு தமிழகத்தை சிவப்பு மண்டலமாக மாற்றவே துணை போகும்.

எனவே தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்ற முடிவை திரும்ப பெற வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.