Skip to main content

தாமிரபரணியில் வெள்ளம்... மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்! (படங்கள்)

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

தென்மேற்குத் தொடர்ச்சி மலையின் அம்பை பகுதி மலையின் சுமார் 6500 அடி உயரத்திலிருக்கும் அகத்தியர் மெட்டு மலைப்பள்ளத்தாக்கின் பின்புறமிருக்கும் சதுப்பு நிலக்காடுகள் எப்போதும் நீர்ப்பிடிப்புகளைக் கொண்டவை. கோடைகாலம், மழைக்காலம் என்றில்லாமல் மிகவும் உயர் குளிர்நிலையிலிருப்பதால், அந்தச் சதுப்பு நிலக்காடுகள் வருடம் முழுக்க தண்ணீரை உள்வாங்கி வெளியேற்றும் பகுதி. இதிலிருந்து உற்பத்தியாகும் தண்ணீர்தான் அருவியாகத் தரையிறங்கி பாபநாசம், மணிமுத்தாறு வழியாகப் பாய்வதால் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியாகிறது.


கோடைக்காலத்தில் சுமாரான மழை பெய்தாலும் நீர்பிடிப்பு வெள்ளமாக வெளியேறும், அதுவே மழைக்காலம் என்றால் தாமிரபரணி பொங்கிவிடும்.
 

கடந்த அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை ஆரம்பித்த உடனேயே வறண்டிருந்த பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. நேற்று முன்தினம் அடைமழையாய் நீர்பிடிப்பு என்றில்லாமல் மாவட்டம் முழுவதும் 19 செ.மீ. மழை பெய்ததால் மேற்குத் தொடர்ச்சி மழையிலுள்ள குற்றாலம் நகரின் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. மிகப்பெரிய அணையான மணிமுத்தாறு தவிர பாபநாசம் முழுக்கொள்ளளவான 141.65 அடியை எட்டியது. சேர்வலாறின் அணைமட்டம் 148.16 என கொள்ளளவானது. மணிமுத்தாறு 92.40 அடியானது.
 

மேலும் அணைகளுக்கு வரும் தண்ணீர் இங்கிருந்து, உபரி நீர் 9280 கனஅடி வெளியேற்றப்பட்டதால் அம்பை, பாபநாசம், கல்லிடைக்குறிச்சிப் பகுதிகளில் வெள்ளமாக கரை புரண்டது. மேலும் மாவட்டத்தின் பச்சையாறு, ராமநதி, கடனாநதி போன்ற அணைகள் நிரம்பியதால் அதன் உபரி நீர் தனி ரூட்டில் பயணித்து தாமிரபரணி ஓடும் முக்கடலான முக்கூடலில் சங்கமித்து மொத்த வெள்ளம் பெருக்கெடுத்தது. அங்கிருந்து நிமிடத்திற்கு பத்தாயிரம் கன அடிகளுக்கும் மேற்பட்ட நீர், வெள்ளமாக நெல்லை வழியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. வீணாகச் ஸ்ரீவைகுண்டம் வழியாகக் கடலில் கலக்கிறது.
 

இதனால் பாபநாசம் காரையாறு முண்டன்துரை செல்லும் பாலம் துண்டிக்கப்பட்டது. இவைகள் வெள்ளத்தால் மூழ்கின. நெல்லை கொக்கிரகுளம் பகுதியின் தைப்பூச மண்டபத்தின் வாசல்படிகளைத் தொட்டபடி வெள்ளம் எட்ட, ஆற்றிலிருக்கும் குருக்குத்துறை, கருப்பந்துறை சிந்துப்பூந்துறை, மணிமுத்தீஸ்வரம், படித்துறைகள் உட்பட அந்தப்பகுதியின் 10- க்கும் மேற்பட்ட கல்மண்டபங்கள் வெள்ளத்தால் மூழ்கின. மேலும் குருக்குத் துறையின் முருகன் கோவில் மண்டபம் வெள்ளம் காரணமாகத் துண்டிக்கப்பட்டதால் கோவில் மண்டபம், மற்றும் கோபுரத்தைத் தொட்டபடி வெள்ளநீர் செல்வதால் பக்தர்களால் ஆலயம் செல்ல முடியவில்லை.
 

இதனிடையே தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் பகுதியில் ஒரே நாள் இரவில் 19 செ.மீ. மழை கொட்டித்தீர்த்ததால் அந்தப் பகுதியிலுள்ள விஜய அச்சம்பாடு கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்து வீடுகளைச் சுற்றிக் கொண்டதால் மக்கள் பாதுகாப்பாக வெளியுற்றப்பட்டனர். தூத்துக்குடியின், திரு.வி.க.நகர், அமுதா நகர், எம்.ஜி.ஆர்.நகர், மினிசகாயபுரம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கைகளும் முடக்கப்பட்டன.



 

சார்ந்த செய்திகள்