Skip to main content

தமிழகத்தில் மதுக்கடைகளை நாளை திறக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Published on 06/05/2020 | Edited on 06/05/2020

 

 TASMAC open issue - chennai highcourt judgement

 

தமிழகத்தில் கரோனா வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் 508 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில் தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பையும் நேற்று முன்தினம் தமிழக அரசு வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மதுக்கடைகள் திறக்க இருப்பதால் மது பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


இதற்கிடையில் மதுக்கடைகள் திறப்பதற்கு எதிராக திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் மற்றும் வழக்கறிஞர் ராஜேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுபாட்டில்களை ஆன்லைனில் விற்பனை செய்து டோர் டெலிவரி செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, மதுவை வீடுகளில் டோர் டெலிவரி செய்ய முடியாது. டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படும், பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், மனு மீதான தீர்ப்பு மாலை 5 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  இந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் நாளை மதுக்கடைகளை திறக்க தடையில்லை என்று கூறியது. மேலும், சமூக விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம்  தீர்ப்பில் கூறியது. 

 

சார்ந்த செய்திகள்