"டாஸ்மாக் கடைகளில் கடந்த 18 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான அனைத்துச் சலுகைகளையும் வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்கி பாதுகாப்பற்ற கடைகளை மூட வேண்டும். சுழற்சி முறையில் பணியிடமாறுதல் செய்ய வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களைத் தொடர்ந்து தாக்கும் சமூக விரோதிகளைக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்பன உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், 25ஆம் தேதி (இன்று) ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் தொ.மு.ச. தலைவர் கோபால் தலைமை தாங்கினார். ரவிச்சந்திரன், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டத் தலைவர் சின்னசாமி, சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சாதிக் எனப் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். டாஸ்மாக் ஊழியர்கள் பலர் தங்களது மனைவி, குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.