Skip to main content

'மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவினை திரும்பப்பெற வேண்டும்'- நா.சண்முகநாதன் கோரிக்கை!

Published on 04/09/2020 | Edited on 04/09/2020

 

tamilnadu primary schools teacher association tn government

 

 

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மேல் செல்லாது அவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற  தமிழக அரசின் முடிவினை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் நா.சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இது குறித்து அவர் கூறியதாவது: "பொதுக் கல்வித் தகுதியோடு பிளஸ் டூ, பிஏ, பி.எஸ்சி போன்றன படிப்புகளை படித்து ஆசிரியர் பணிக்கென்றே உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இரண்டாண்டு ஆசிரியர் தொழில்கல்விப் பயிற்சி படித்து தேர்ச்சி பெற்று ஆசிரியர் வேலைக்கு காத்திருக்கையில், மேலும் ஒரு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்பது வேதனையானதாகும்.

 

ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு எழுதிட வேண்டும் என்னும் தமிழக அரசின் அறிவிப்பானது, ஆசிரியர் பயிற்சி முடித்து பத்தாண்டு காலத்திற்கும் மேலாக ஆசிரியர் பணிக்கு காத்திருப்போர் தலையில் இடியை இறக்கியதற்கு ஒப்பானதாகும். இருந்தாலும் தகுதித் தேர்வினை எழுதினார்கள். அதிலும் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருக்கும் 80 ஆயிரம் பேரின் தேர்ச்சி சான்றிதழ் காலம் டிசம்பருடன் முடிவடையும் நிலையில் உள்ள பொழுது ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அத்தேர்ச்சி ஏழாண்டு காலத்திற்குத்தான் செல்லுபடியாகும் என கூறுவது “பெரிய குழிவெட்டி அக்குழியில் குதிரையை குப்புறத்தள்ளி மண்போட்டு மூடியதற்கு” இணையானதாகும்.

 

எனவே ஆசிரியர் பயிற்சி முடித்தும்,பி.எட் படிப்பு முடித்து ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்று பணி நியமனம் கிடைக்கப்பெறாமல் காத்திருப்போர் குடும்பங்களின் மனநிலையை தமிழக அரசு கனிவுடன் பரிசீலித்து ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவினை முற்றிலுமாக திரும்பப்பெறவேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்