Skip to main content

பிளஸ்2 பொதுத்தேர்வு: தமிழ் வினாத்தாள் சற்று கடினம்!

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

 


பிளஸ்2 தமிழ் பாடத்தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


தமிழகம், புதுவையில் பிளஸ்2 பொதுத்தேர்வு வெள்ளிக்கிழமை (மார்ச் 1, 2019) தொடங்கியது. மொத்தம் 7082 பள்ளிகள் மூலம் 861107 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தனித்தேர்வர்களோடு சேர்த்து மொத்தம் 887992 பேர் இந்த தேர்வை எழுதுவதாக அரசுத்தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. 

 

e


சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 105476 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் 40068 பேர் பிளஸ்2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.


கடந்த ஆண்டு வரை பிளஸ்2 பொதுத்தேர்வு மொத்தம் 1200 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டு வந்தது. அதாவது, ஒவ்வொரு பாடத்தேர்வும் தலா 200 மதிப்பெண்கள் என 6 பாடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. நடப்புக் கல்வி ஆண்டு முதல் பிளஸ்2 பொதுத்தேர்வு 100 மதிப்பெண்கள் அடிப்படையில் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது.


அந்த புதிய முறைப்படி மார்ச் 1ம் தேதி தேர்வு தொடங்கியது. முதல் நாளன்று தமிழ் பாடத்தேர்வு நடந்தது. செய்யுள், உரைநடை இரண்டு பகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 90 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. 10 மதிப்பெண்கள் அகமதிப்பெண்களாக வழங்கப்படும். இதுவரை, வழக்கமாக தமிழ் மொழிப்பாடத்தேர்வு எளிமையாக இருந்து வந்தது.   ஆனால் வெள்ளிக்கிழமை நடந்த தமிழ் மொழிப்பாடத்தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் அதிருப்தியுடன் கூறினர். குறிப்பாக, செய்யுள் பகுதியில் 2 மதிப்பெண்கள் பிரிவில், இதற்கு முந்தைய தேர்வுகளில் கேட்கப்படாத புதிய கேள்விகள் கேட்கப்பட்டு இருந்ததாகக் கூறினர். அதேபோல், உரைநடை பகுதியிலும் அதிகம் கேள்விப்படாத வினாவாக தேடிப்பிடித்து கேட்கப்பட்டு இருந்தது என்றனர்.


நெடுவினா பகுதியை பொருத்தவரை கதை எழுதுதல் பகுதியில் எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே 'பால் மணம் பிள்ளை', 'ஒவ்வொரு கல்லாய்' தலைப்புகள் கொடுக்கப்பட்டு இருந்தன. பெரும்பாலான மாணவர்களின் தேர்வாக 'பால் மணம் பிள்ளை' அமைந்து இருந்தது. 


இதுகுறித்து தமிழ் ஆசிரியர்கள் சிலரிடம் கேட்டபோது, ''மிக நன்றாக படிக்கும் மாணவர்கள்கூட நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுவது கடினம். மெதுவாக கற்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதும் கொஞ்சம் கடினம்தான். மற்றபடி சராசரி மாணவர்கள் எளிதில் தேர்ச்சி பெறும் வகையில்தான் இருக்கிறது. 25&30 சதவீதம் இந்த வினாத்தாள் கடினமாக இருக்கிறது,'' என்றனர்.
 

சார்ந்த செய்திகள்