Skip to main content

ஊரடங்கு உத்தரவால் இப்படியும் சிக்கல்...சேலம் ஜி.ஹெச்., ரத்த வங்கியில் ரத்தம் தீர்ந்து போகும் அபாயம்!

Published on 22/04/2020 | Edited on 22/04/2020


ரத்தக்கொடை முகாம்கள் மூலம் சேலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு ரத்தம் சேகரிக்கப்பட்டு வந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், ரத்த வங்கியின் கையிருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் முக்கிய அறுவை சிகிச்சைகளின்போது ரத்தம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 


சேலத்தில் உள்ள அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேலம் மட்டுமின்றி நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகளும் சிறப்பு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 

சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், முக்கிய அறுவை சிகிச்சைகள், பிரசவங்களின்போது பாதிக்கப்பட்டவருக்கு ரத்தம் செலுத்தப்படும் என்பதால், ரத்தப் பயன்பாடு அதிகமாக உள்ளது. இம்மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் தன்னார்வலர்களிடம் இருந்து பெறப்படும் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டு, சேமிப்பில் வைக்கப்பட்டு உள்ளது. 

 

tamilnadu lockdown salem government hospital blood bank


கொடையாகப் பெறப்படும் ரத்தத்தை அதிகபட்சமாக 6 வாரங்கள் வரை 2 முதல் 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து வைத்திருக்க முடியும். ரத்தச் சிவப்பணுக்களையும் இதே கால அளவில் பாதுகாக்க முடியும்.

அதேபோல், ரத்தத்தில் இருந்து பிளேட்டிலெட்டுகளை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்து 22 முதல் 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், 5 நாள்கள் வரை சேமிக்க முடியும். பிளாஸ்மாவை மட்டும் தனியாகப் பிரித்து மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஒரு ஆண்டு வரை சேமித்து வைக்கலாம். 
 

http://onelink.to/nknapp


நோயாளிகளுக்குத் தேவையான ரத்தம், தன்னார்வலர்கள் மூலமே பெறப்பட்டு வருகிறது. மேலும், ரத்தக்கொடைக்காக மருத்துவமனை சார்பில் அடிக்கடி ரத்தக் கொடை முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. 

சராசரியாக சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மாதந்தோறும் குறைந்தபட்சம் 600 யூனிட்டுக்கும் மேல் ரத்தம் தேவைப்படுகிறது. கரோனா வைரஸ் தொற்று அபாயத்தால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ரத்தக்கொடை முகாம்கள் நடத்துவதிலும் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதோடு, ரத்தக்கொடையாளர்களும் அரசு மருத்துவமனைக்கு வருவதிலும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இதனால் அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ரத்தம் இருப்பு பெருமளவு குறைந்துள்ளது. இதேநிலை தொடர்ந்தால் அடுத்தடுத்து முக்கிய அறுவை சிகிச்சைகள், பிரசவ சிகிச்சைகளை மேற்கொள்வதிலும் கடும் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் கூறுகையில், ''ரத்த வங்கியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள ரத்தம் பெருமளவு குறைந்துள்ளது. ஊரடங்கு உத்தரவால் சாதாரண நாள்களைப் போல இப்போது ரத்தக்கொடை முகாம்கள் நடத்த முடியவில்லை. தன்னார்வலர்களிடம் இருந்து ரத்தக்கொடை பெற முடிவு செய்துள்ளோம். ரத்தம் கொடுக்க விரும்புவோர் வின்சென்ட் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்தம் வழங்கலாம். ரத்தக்கொடை அளிக்க விரும்புவோர் கூட்டமாக வருவதைத் தவிர்ப்பதோடு, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்,'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்